1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *