பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உச்சகட்டத்தை அடைந்திருக்கும் இந்த நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷபாஸ் ஷெரீபும், நவாஸ் ஷெரீபின் மகனும் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு வீட்டுக் காவலில் வைப்பதற்கு பொலிஸார் பிடியாணை பெற்றுள்ளனர்.
தமது ஆட்சிக் காலத்தில் பதவியிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், பஞ்சாப் மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை இரத்துச் செய்துவிட்டு மீண்டும் தமது சகோதரரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக் கட்சியினர் இன்று 16ம் திகதி பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கப்டன் இம்ரான்கானின் தெரீக் இன்ஸாப் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நவாஸ் ஷெரீப் கட்சியினர் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதற்கு இம்ரான்கான் கட்சியினரும், நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் செய்யத் யூஸ¤ப் ராஸா கிலானி இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதிக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கினார். அந்நாட்டு இராணுவ தளபதி கியானியும் இப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியைக் கோரினார்.
இதேநேரம் இந்நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் கூட்டாக சமரசத் திட்டமொன்றை முன்வைத்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் கிலாரி கிளிங்டன் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடனும், நவாஸ் ஷெரீபுடனும் தொலைபேசி ஊடாகத் தனித் தனியாகத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தான் ஜனாதிபதியையும் நவாஸ் ஷெரீபையும் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி சர்தாரி, நவாஸ் ஷெரீப் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடை விதித்த தோடு, போராட்டத்தையும், ஊர்வலத்தையும் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் மீது தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டுள்ளனர். நேற்று நண்பகல் வரையும் 1200 தொண்டர்களும் 30 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் கைது செய்யப்பட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையும் மீறி நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவாளர்களும், தொண்டர்களும், சட்டத்தரணிகளும் பல்வேறு நகரங்களிலிருந்து இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளனர். நவாஸ் ஷெரீபின் சகோதரர் தனது ஆதரவாளர்களுடன் ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்து சேர்ந்துள்ளார். இம்ரான்கானும் ஏற்கனவே இஸ்லாமாபாத் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்.
இதேநேரம் நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத் நோக்கி லாஹரிலிருந்து நேற்று ஊர்வலமாகச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் நவாஸ் ஷெரீபை இராணுவத்தினரும், அவரது சகோதரரையும், மகனையும், இம்ரான்கானையும் பொலிஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் சட்டத்தரணிகளும் பல்வேறு நகர்களிலிருந்தும் இஸ்லாமாபாத் நோக்கி ஊர்வலமாகச் செல்லுவதாகவும் அவர்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் கைது செய்யப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் இஸ்லாமாபாத் நகருக்குள் எவருமே நுழைய முடியாதபடி சகல வீதிகளிலும் கொள்கலன்கள் குறுக்காக நிறுத்தப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. அவற்றையும் மீறி அனேநகர் நகருக்குள் நுழைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பாராளுமன்றத்திற்கு அருகே எவரும் வர முடியாதபடி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருப்பதோடு அங்கு இராணுவத்தினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.