மேல் மாகாண சபைத் தேர்தலையொட்டி மேலதிகமாக 1166 வாக்குச்சாவடிகளை நிறுவ தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணுவதற்கு தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளதையடுத்தே வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்கு எண்ணும் நிலையத்திற்குமான வாக்காளர் தொகை 1500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் வாக்கு எண்ணும் நிலையங்களின் தொகை அதிகரிப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 2459 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தொகை 3625 ஆக உயர்த்தப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
பரீட்சார்த்தமாகவே வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணும் பணிகளை மேற்கொள்ள தேர்தல் திணைக்களம் முடிவு செய்ததாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமனசிறி கூறினார்.
இதேவேளை வாக்குச் சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரி வருவதாகவும் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் திணைக்களத்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையாளர் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.