இலங்கையில் யுத்தநிறுத்தம் அவசியம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வலியுறுத்தலையும் பிரச்சினைக்குத் தீர்வு அதிகாரப்பரவலே என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் உணர்ந்து அதனை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
யுத்த நிறுத்தம் என்பது புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது மாத்திரம் அல்ல. யுத்தத்தை ஆரம்பித்த அரசாங்கமே ஆயுத நடவடிக்கைகளை முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார். யுத்தத்தை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்தைக் கோரியிருக்கின்றமை மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே விக்ரமபாகு கருணாரட்ண இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மறைமுகமாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது. இது இந்தியாவின் போலித் தனத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வருகின்ற அதிகாரப் பரவலானது இங்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப்பரவலே தீர்வு என்று கூறுகின்ற இந்தியா, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மையான விடயம்.
இருப்பினும், இன்றைய நிலையில் அதிகாரப்பரவலை கோரியிருக்கின்ற இந்திய மத்திய அரசு, ஆயுத வழங்கலை நிறுத்திக்கொள்வதே அத்தியாவசியமானது. ஏனெனில், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும். மறுபுரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இங்கு யுத்த நிறுத்தம் ஒன்றைக் கோரியிருக்கின்றமை வரவேற்கத்தக்கது. இதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் கோரிய மேற்படி ஒன்றியமானது புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது. இந்த நாட்டின் குடிமக்கள் அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தலையும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் உடனடியாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்றார்.