போதியளவு மருந்துவகைகள் மற்றும் அடிப்படைவசதிகள் எதுவுமில்லாத நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையின் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையேற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி ரி.வரதராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; நேற்று அவசர நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பாளர்களென 425 பேரை கப்பல் மூலம் திருமலைக்கு நாம் அனுப்பியுள்ளோம். இதில் காயப்பட்டவர்களே அதிகமானவர்கள்.
வன்னியில் புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமேயுள்ளது. இங்கு காயத்துக்கான மருந்து உட்பட ஏனைய மருந்துகள் முடியும் தருவாயிலுள்ளது. இதனால் நாம் காயத்துக்கு மருந்துகளின்றி துணிகளையே கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இது குறித்து வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம், பக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.
கடந்த மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துகள் அனுப்பப்படாமையினால் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.