பேரம்பேசுவதற்கு மீண்டும் ஓர் சந்தர்ப்பம் – பயன்படுத்திக்கொள்வார்களா தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபாய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதி பதவியை விட்டு விலகுவதாக உத்தியோகபூர்வமாக இன்று காலை உத்தியோகபூர்வமாக செய்தி வெளியான நிலையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாக எண்ணி இன்று கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் பாற்சோறு செய்தும் பட்டாசு வெடித்தும்  தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்தப் போராட்டம் உண்மையிலேயே புரட்சி என கூற கூடிய அளவிற்கு இருந்ததா..?  என கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும். போராட்டக்காரர்கள் பெரிதாக எந்த ஒரு அரசியல் விடயங்களும் – புதிய இலங்கைக்கான தெளிவான திட்டங்களும் முன்வைக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக ராஜபக்சக்கள் மீதான வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

இது மட்டும் இல்லாது போராட்டக்காரர்கள் தங்களுடைய போராட்டத்துக்கான கொள்கைகளையும் கோஷங்களையும் முறையாக வெளிப்படுத்தவில்லை என்பதே கண்கூடு. குறிப்பாக ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டமையாக இருக்கலாம் அல்லது அலரி மாளிகை மற்றும் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அனைத்தும் இலங்கையில் ஜனநாயகம் என்ற விடயத்தை கேள்விக்கு உள்ளாக்கி கேலிக்கூத்தாக்கி உள்ளது என்பதே உண்மை. போராட்டம் இடம்பெற்றது ஏன்..? எதற்கு..? என்ற வினாக்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை. ஜூலை 9  போராட்டத்தினுடைய முடிவில் போராட்டக்காரர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை மிக்க கனதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மாறாக போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சாதாரணமாக கடந்து விடக் கூடியவையாக காணப்பட்டன. உண்மையிலேயே இந்த போராட்டம் எரிபொருள் தட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாடு என ஆக சில விடயங்களோடு மட்டுமே முற்றுப் பெற்றுள்ளது என்பதே கவலையான உண்மை. போராட்டக்காரர்கள் ராஜபக்சக்களை எதிர்ப்பது போன்றதான ஒரு தோரணையில் மட்டுமே போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி  தமிழின் கள அனுபவம் - BBC News தமிழ்
இந்தப் போராட்டத்தின் அறிக்கைகளில் முன் வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கூட தனித்து மீண்டும் தனிப் பெரும்பான்மை என்ற கருத்தியலையே முன்னிறுத்துவதாகவே காணப்பட்டது. முக்கியமாக கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்ட எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய போர் குற்றங்கள் தொடர்பிலும் , காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு தொடர்பிலோ பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லை.  இது இன்னமும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு  ஏற்படவில்லை என்பதையே மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 30 வருட போர் வெற்றியை கொடுக்க மனதில்லாது சரத் பொன்சேகாவிற்கு அந்த 30 வருட போர் வெற்றியை சூட்டுவதற்கு முயற்சித்ததையும் காண முடிந்தது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்ட  ஏனைய மத குருமார்களை காட்டிலும் பௌத்தசங்கத்துக்கும் – அதன் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதன் பின்னணியில் இன்னமும் சிங்கள-பௌத்த மனோநிலையில் இருந்து இந்த நாடோ – சிங்கள இளைஞர்களோ மீளவில்லை என்பதையே காண முடிகின்றது.
இவற்றுக்கு அப்பால் ,
ராஜபக்சக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை தமிழர் தரப்பு முறையாக பயன்படுத்தியதா..? எனக் கேட்டால் முற்றிலும் இல்லை என்றே கூற வேண்டும். ஆக குறைந்தது தங்களுடைய அபிலாஷைகளையும் – தேவைகளையும் – தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீத்யையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் சரி போராட்ட களத்தில் ஏதாவது கோஷங்கள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்டால் அதுவும் இல்லை. வடகிழக்கு தமிழர்கள் தங்களுடைய தேவைகளையும் – தங்களுடைய அபிலாசைகளையும் – தங்களுடைய பிரச்சனைகளையும் தென்னிலங்கைக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பை இன்று தவற விட்டுவிட்டார்கள் என்பதை உண்மை.
இந்தப் போராட்டத்துக்காக பெருமளவு கலந்து கொண்ட இளைஞர்களில் அதிகம் பேர் சிங்கள இளைஞர்களாகவே காணப்பட்டனர். தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்த போதும் சொற்பமானவர்களாகவே கலந்து கொண்டனர்.            வட- கிழக்கில் இருந்து கலந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை காட்டிலும் தென் இலங்கையிலும் – மத்திய இலங்கை பிராந்தியங்களிலும் பிறந்து வளர்ந்த – வேலைக்காக குடியேறியுள்ள  தமிழ் இளைஞர்களே இந்த போராட்டங்களில் கலந்து கொண்டு இருந்தனர். இதனாலையோ என்னமோ ராஜபக்சக்களிடமும் – தென்னிலங்கை சமூகத்திடமும்  கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள் – தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்களும்  கேட்கப்படாமலும் – தெரிவிக்கப்படாமலுமே  விடப்பட்டு விட்டன.
இது போக ராஜபக்சகளுக்கு எதிராக தென்னிலங்கை முழுமையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க அதனை ஏதோ விளையாட்டுப் போட்டி பார்ப்பது போல தமிழர் தரப்பு யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது போலவும் ஏதோ நடத்தி முடிக்கட்டும் நாம் வெறும் பார்வையாளர்களே என்ற கோணத்தில் கையாண்டு இருந்தது. மேலும் Karma is boomerang என்ற மனோ நிலையில் நின்று கொண்டு ராஜபக்சக்களை கர்மா தண்டிக்கிறது என பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் தென்னிலங்கை முழுமையுமே போராட்டத்தால் எரிந்து கொண்டிருக்க வட-கிழக்கு திருவிழா கொண்டாட்டங்களாலும் – பெட்ரோலுக்கான காத்திருப்புகளாலும்  நிறைந்து வழிந்தது.
மேலும் தமிழ் அரசியல்வாதிகள் சரி இந்த போராட்டங்களை  ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் –  காலதிகாலமாக பேசி வரும் தமிழர் பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக பயன்படுத்தினரா..?  என கேட்டால் அதுவும் இல்லை. ஜூலை 9 ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து முடிந்திருந்த  இறுதிப் போராட்டத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் தமிழ் தலைமைகள் சார்பில் சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கு பற்றி இருந்தனர். தமிழர் தரப்பினுடைய பிரச்சனைகள் தொர்பில் பலமாக  அவர்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்த்து இருந்த போதும் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி அவர்கள் எதையுமே அங்கு கதைத்து இருக்கவில்லை. குறிப்பாக இன்னமும் அமுலில் இருக்கக்கூடிய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டியதன் தேவை குறித்தோ, காணாமல் ஆக்கப்பட்டு ஒருபிரச்சினைக்காக ஆயிரம் நாட்களை தாண்டியும் போராடும் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகள் குறித்தோ , வடகிழக்கு சுவிகரிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பிலும் எந்த ஒரு விடயங்களையும் அவர்கள் பேசி இருக்க வில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு நாள் ஜனாதிபதி பதவியை ஏற்கும் வாய்ப்பையோ –  அதிகாரத்தையோ  கூட வழங்காதீர்கள் என மிக வினயமாக  அவர்கள் வேண்டி இருந்தனர். (இதே ரணில் விக்கிரமசிங்க வெற்றிக்காக ஓட்டு போடுங்கள் என வட-கிழக்கின் தெருக்களில் இறங்கி கூவி கூவி திரிந்ததும் இதே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம்.) ஏனைய தமிழ்  அரசியல் தலைவர்களின் அடையாளமே இந்த போராட்ட காலங்களில் இல்லாது போய்விட்டது.
முழுமையாக தமிழ் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் –  தமிழ் மக்களும் – தமிழ் இளைஞர்களும்
இந்தப் போராட்டத்தில் இருந்து முழுமையாக  விலகியே இருந்தனர்.
பயன்படுத்த வேண்டிய – பயன்படுத்தி இருக்க வேண்டிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இன்று தமிழ் சமூகம் தவற விட்டுவிட்டது என்பதை உண்மை. ஆக குறைந்தது இந்த ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தினை பயன்படுத்தி தென்னிலங்கை சமூகத்தின் கவனத்தை  தமிழர் பக்கம் திருப்புவதற்கு இம்மியளவு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை. இன்னும் இந்த சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் தீர்வை தரும் என அதே பழைய பொய்களை தான் இந்த அரசியல்வாதிகள் தமிழ்ர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள். தமிழர்களும் அதனைத் தான் உண்மை என்றும் – சரியானது என்றும் நம்பிக் கொண்டு அதே போலி தமிழ் தேசியத்தில் திளைத்திருக்கப் போகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் இருந்த தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
சரி நடந்து முடிந்த விடயங்களை கைவிடுவோம். இன்னும் மீதமாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் தலைமைகளை நம்பி தமிழ் மக்கள் வழங்கிய அந்த ஓட்டுக்களையும் பயன்படுத்தக்கூடிய இறுதி சந்தர்ப்பம் ஒன்று எஞ்சியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளவுள்ள  சவால்கள்? – Maatram
இந்தப் போராட்டம் இலங்கையில் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டியதற்கான புதிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அடிப்படையில் புதிய ஜனாதிபதி தெரிவு ஜூலை 20ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீ நான் என்ன முண்டியடித்துக் கொண்டு தங்களை ஜனாதிபதி வேட்பாளர்களாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வாக்களிக்கப் போகிறவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான். தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் வட-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 13 பேர் உள்ளனர். இவர்கள் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய முக்கியமான ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது.  நீ நான் என்ன போட்டி போட ஆரம்பித்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தங்களுடைய சரியான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய அதே நேரம் இந்த பந்தயத்தில் வெற்றிபெறக்கூடிய  வேட்பாளர் ஒருவரை தமிழ் தலைமைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் மிக நீண்ட காலமாக இருந்து வரக்கூடிய பல பிரச்சனைகளும் வட- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால்  கோரிக்கையாக முன் வைக்கப்படுதல் வேண்டும்.   குறிப்பாக தமிழர் பகுதிகளில் இன்னமும் எரிந்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சனைகளான ; வட-கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொடர்பான விடயங்களும், போர் முடிந்த பின்னும் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் தமிழர்களின் நிலங்கள் தொடர்பிலும், ஆயிரக்கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலும் , பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தேவை தொடர்பிலும் , இயங்காது இருக்கக்கூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்பிலும் அழுத்த திருத்தமாக குறித்த கோரிக்கைகள் ஊடாக வலியுறுத்தப்படுதல் வேண்டும்.
இந்த கோரிக்கைகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்த வகையில்  ஒரு வேட்பாளரை தெரிவு செய்து குறித்த கோரிக்கைகள் தொடர்பில் வலியுறுத்தி தங்களுடைய ஆதரவை குறித்த வேட்பாளருக்கு  வழங்க  முன்வர வேண்டும்.
தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடல் - GTN
பரபரப்பான அரசியல் நிலவரம் ஒன்று இலங்கையில் தோன்றியுள்ள நிலையில் , இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாகவோ  அல்லது இது தொடர்பான ஒரு கூட்டத்தை நடத்தி ஒரு பொதுவான முடிவுக்கு வந்ததாகவும் எந்த ஒரு அசைவுகளையும் காண கிடைக்கவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம் கடந்த காலங்களைப் போலவே பேரம் பேச வேண்டிய இன்னும் ஒரு அற்புதமான தருணத்தை இந்த ஒற்றுமை இல்லாத தமிழ் தேசிய தலைவர்கள் தவறவிடப்போகிறார்களா..? அல்லது பயன்படுத்தப்போகிறார்களா..? என்று..!
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *