புதிய ஜனாதிபதி வேட்பாளர்களாக இது வரை நான்கு பேர் – அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிரான தொடர் போராட்டம் அழுத்தம்  காரணமாக  நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்ச முறைப்படி தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். முன்னதாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியை  தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை  பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க திசநாயக்க அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என அவர் தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், புதிய ஜனாதிபதிக்கான  தேர்தல் எதிர் வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியாக காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ள நிலையில் அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர ஜே.வி.பிதலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதே நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

தீர்க்கமான முடிவு ஒன்றை தமிழர் தரப்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் மனுவை கையளிக்க இன்னும் மீதமாக நான்கு நாட்கள் உள்ள நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன மாற்றஙங்கள் நடக்கப்போகின்றன என்று.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *