ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் பாமக பிரமுகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழ வீதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் இராஜசேகர். இவருக்கு வயது 30. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை டி.வி. மற்றும் செய்தித்தாள்களில் படித்து, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் அவர் உடல் முழுவதும் எரிந்து கருகியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.