இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்தவொரு விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மக்களால் எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை குறித்த ஜனாதிபதி தெரிவுக்கான வேட்பாளர்களால் பூர்த்திசெய்யமுடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
….
அமையும் இடைக்கால அரசாங்கத்தில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து தமிழ்தேசிய கட்சிகள் அனைத்தும் இணைந்து பொதுவான – தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பல அரசியல் விமர்சகர்களும் வலியுறுத்தி வந்தனர். அல்லது யாரையும் ஆதரிப்பது இல்லையென்றாலும் தமிழ்தேசிய கட்சிகள் இணைந்து ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்தேசிய கட்சிகள் ஒரு போதும் இணையவே மாட்டோம் என்பதையும் – தமிழ்தேசியம் பேசும் இந்த அரசியல்வாதிகளிடம் இம்மியளவும் ஒற்றுமை இல்லை என்பதையும் கஜேந்திரர்களின் இந்த அறிவிப்பு மேலும் எடுத்துக்கூறியுள்ளது. யாழ்.மாநகர மேயராகவுள்ள வ.மணிவண்ணன் விடயத்திலும் கஜேந்திரர்கள் இதே போக்கையே கடைப்பிடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்தேசியம் பேசும் சொற்பமான நாடாளுமன்ற அங்கத்தவர்களே நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் நிலையில் இவர்களிடையே கூட ஒற்றுமை இல்லை. இவர்கள் தான் தனிநாடு வேண்டும் என கொடி பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த போலிதமிழ்தேசியவாதம் பேசும் அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது தென்னிலங்கை தலைவர்கள் எவ்வளவோ மேல்.