வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு கட்சிக்கும் தலா ஒரு அமைச்சுப் பதவியை வழங்கி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.