அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கி வருகின்றன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை சீர்க்குலைக்கும் என ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விலக உள்ளதாக ரஷ்யா திடீரென அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் யூரி போரிசோவ் கூறுகையில்,
2024- க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 2024 க்குப் பிறகு ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகி, அதன் சொந்த சுற்றுப்பாதையை அமைப்பதில் கவனம் செலுத்த உள்ளது என்றும் அவர் கூறினார். உக்ரைனில் கிரெம்ளின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.