காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை விரட்டிவிட்டு அமெரிக்க – ஐஎம்எப் (சர்வதேச நாணய நிதியம்) ஆல் சிபாரிசு செய்யப்பட்ட ரணிலை ஜனாதிபதியாக்கியது. அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தங்கள் காரியம் நடந்து முடிந்ததும் அரகலியாக்களை அடித்து விரட்டினர். கோட்டபாய ராஜபக்ச மக்களால் தெரிவு செய்யப்பட்டு இருந்தும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்டிருந்தும் அரகலியாக்களுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தவில்லை. அரகலியாக்களின் போராட்டத்தினால் நட்டைவிடே ஓடி பதுங்கி இருக்கின்றார். விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் ராஜபக்சக்களின் வசமே இன்னமும் உள்ளது. ராஜபக்சக்கள் யாரைக் காட்டினார்களோ அவர் – ரணில் ராஜபக்ச ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.
அரகலியாக்களும் அமெரிக்க – ஐஎம்எப் கூடலும் ஊடலும்:
இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் ஐஎம்எப் – சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் காலிமுகத்திடல் அரகலியாக்கள் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தவும் அரகலியாக்கள் கோரவில்லை. அப்படிக் கோரி இருந்தால் நாடு எதிர்காலத்தில் சுயசார்பாக வந்துவிடும். ஐஎம்எப் – உலகவங்கிக்கு அடிமையாக இராது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் முழுமையான ஆதரவு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டு இராது. இந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகள் கண்டுகொண்டிராது. போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களுக்கு 45 மில்லியன் டொலர் வழங்கப்பட்டும் இராது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோக்கோ கோலா குடிபானம் முதல் இலவச உணவுகள் வழங்கப்பட்டிராது.
ஆனால் நடந்தது என்ன? மேலே சொன்னதெல்லாம் போராட்டகாரர்களுக்கு வாரி வழங்கப்பட்டது. காற்று வாங்க வந்த போராட்டகாரர்களுக்கு முதலுதவி முகாம்கள் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்டது போல முதற்தரமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. காலிமுகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ கம – கோட்டா கோ ஹோம்’ போராட்டம் தான் உலகில் நடைபெற்ற ஒரே செழிப்பான போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்துதான் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதிக் கட்டத்தில் தான் கும்பலில் கோவிந்தா என்று பெரும் தொகையானோர் ஈர்க்கப்பட்டனர். இதனை ஜேவிபி இன் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிரித்தானியாவில் இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி ஐஎம்எப் இன் நிபந்தனைகளை நிராகரிக்கவும் கடன்களை மீளச்செலுத்த வேண்டாம் என்பது உட்பட பல முற்போக்கான கோரிக்கைகளை வைத்தது. ஆனாலும் இக்கோரிக்கைகள் பெரும்பாலும் தட்டிக்கழிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கைகள் தட்டிக் கழிக்கப்பட்ட போதும் கூட தமிழ் சொலிடாரிட்டி அரகலியாக்களுடைய அமெரிக்க ஐஎம்எப் சார்புநிலைக்கு ஆதரவளித்தனர். இந்தப் போராட்டங்களில் தலையைக் காட்டாவிட்டால் தாங்கள் துரோகிகள் ஆகிவிடுவோம் என்பதால் மேற்கத்திய ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்ட லிபரல்களும் இடதுசாரிகளும் கூட தங்கள் தங்கள் நாடுகளில் ஆதரவுப் போராட்டங்களை கொப்பிகற் முறையில் அல்லது குழவாத உளவியல் மற்றும் டொமினோ தாக்கம் போல் மேற்கொண்டனர்.
அமெரிக்க – ஐஎம்எப் நலன்களுக்காகப் போராடிய இந்த அரகலியாக்களை அமெரிக்க – ஐஎம்எப் ஆதரவு பெற்ற ரணில் பதவியேற்ற 24 மணிநேரங்களிற்குள்ளாக இரவோடு இரவாக விரட்டி அடித்தார். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி அவர்களை விரட்டி அடித்து, ரணில் தன்னுடைய வீட்டை எரித்ததற்குப் பதிலடி வழங்கினார்.
மக்கள் செல்வாக்கற்ற காலிமுகத்திடல் அரகலியாக்கள்:
பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததும் அவருடைய கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அடுத்த தேர்தலலில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு பதிலாக இன்னொருவரை புதிதாக தெரிவு செய்வதன் மூலமே தாங்கள் மக்களிடம் செல்ல முடியும் என்று நம்பினர். அதனால் 24 மணி நேரத்திற்குள் வரலாறு காணாத அளவில் 49 அமைச்சர்கள், துணை அமைசர்கள் பதவி விலகினர்.
ஆனால் ஆறு மாதகாலம் நீடித்த போராட்டத்தின் போதும் அதன் பின் கோட்டபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னும் கூட அவருடைய அமைச்சரவையிலோ பாராளுமன்ற பெரும்பான்மையிலோ குறிப்பிடத்தக்க சலசலப்பு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் கோட்டபாய ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜனப் பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுவோம், அதற்கு ராஜபக்சக்களின் தலைமை தேவை என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு அதனை மிகத் தெளிவாக்கி உள்ளது.
போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜேவிபிக்கு பாராளுமன்றத்தில் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு இப்பதவியை ராஜபக்சாக்களின் பொதுஜன பெரமுன கட்சியினரே வழங்கி இருந்தனர். 134 வாக்குகளை அவர் பெற்றிருந்தார். மறுமுனையில் ரணிலுக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர். அவர் 82 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரும் ராஜபக்சாக்களின் நெருங்கிய சகா. இவ்விருவரில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் ராஜபக்சக்களின் அதரவுடனேயே ஆட்சியை மேற்கொள்கின்றார் என்பதே உண்மை. தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் ராஜபக்சக்களுக்கு மிகவும் விசுவாசமானவர். இவர்கள் அமைக்கின்ற அமைச்சரவை உறுப்பினர்களும் ராஜபக்சாக்களின் அமைச்சரவை உறுப்பினர்களாகவே உள்ளனர். இலங்கை மக்கள் மத்தியில் ராஜபக்சக்களின் ஆதரவுத் தளத்தில் எவ்வித பாரிய பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
இழப்பதற்கு தம்முடைய வறுமையைத் தவிர எதுவுமற்ற மக்கள் அமெரிக்க நலன்களுக்கும் ஐஎம்எப்க்கும் மசிந்துவிட மாட்டார்கள். காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கும் இலங்கை வாழ் சாதாரண மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி உள்ளது. கொழும்பில் நீர்த்தடாகத்தோடு வீடுவைத்திருக்கும் ஒரு மனிதவுரிமை சட்டத்தரணி, தான் நடுத்தரவர்க்கம் என்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகவும் கதையளந்தால் மலையகத்தில் லயன்களில் இலங்கையின் அடிப்படைச் சம்பளத்திலும் குறைவாக சம்பளம் பெறும் குடும்பங்கள் என்ன கருதும்?
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். இலங்கை மக்கள் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மருத்துவக் காப்புறுதி உடையவர்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சக்தி கொண்டவர்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களுடைய நாளாந்த தேவைக்கு பெற்றோல் வேண்டும். சமைக்க எரிவாயு வேண்டும். அவர்களுக்கு பெற்றோலுக்கு மானியங்கள் தேவையில்லை. கள்ளச்சந்தையில் பெற்றோலை லீற்றர் 3,000 ரூபாய்க்கும் வாங்கி ஓடக்கூடியவர்கள். ஆனால் இலங்கையின் கிராமப் புறங்களிலேயே வாழும் பெரும்பாலான மக்கள் எரிவாயுவை பயன்படுத்த தெரியாதவர்கள். அடுப்பூதி ஈர விறகை வைத்தே சமைப்பவர்கள். பல லட்சம் கொடுத்து காரையோ மோட்டார் சைக்கிளையோ வாங்க இயலாதவர்கள். சைக்கிள் இல்லாவிட்டால் பொதுப் போக்குவரத்தில் வாழ்பவர்கள்.
இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது வேலை செய்து சம்பாதிக்காதவர்கள். பெற்றோரை கஸ்டப்படுத்தி மோட்டார் சைக்கிளும் அவர்களிடமே ஓசியில் பெற்றோலும் அடித்து முறுக்கித் திரிபவர்கள். ஓசியிலேயே வாழும் இந்த ஜீவன்களுக்கு வாக்களித்து பழக்கம் இருக்கா என்பதே சந்தேகம். இவர்கள ஏன் போராடினார்கள்? என்னத்தை கோரினார்கள்?
‘கோட்டா கோ ஹோம் – பில் மை பெற்ரோல் ராங் (fill my petrol tank)’ போராட்டம் பூரண வெற்றி. இனிவரப்போகும் விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பல்ல. இதனால் தான் அரகலியாக்கள் இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான சந்தைப் பொருளாதாரத்தையும் அதனை கண்மூடித்தனமாக அமுல்படுத்தக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றியும் உலக வங்கியைப் பற்றியும் மூச்சேவிடவில்லை. கடன்களை மீளக்கொடுப்பதை நிறுத்தக் கோரவும் இல்லை.
anpu
“இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் காரும் மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளவர்கள். ”
Is it a crime to have a car and motor cycle by a protestor? I am sure the author of this article must be having a car and living comfortably in a western country.