காட்டுமிராண்டிகள் போல புதுமுக மாணவர்களை தாக்கியுள்ள யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் – தரங்கெட்டு போய்க்கொண்டிருக்கும் வடக்கின் கல்வி நிலை !

அண்மைய காலகட்டங்களில் வடக்கில் அடுத்தடுத்து சமூக சீரழிவுகளும் – சமூக வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன. அண்மையில் கூட முல்லைத்தீவில் ஒரு பாடசாலை ஆசிரியர் உயர்தர ஆண் மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி குறித்த மாணவர்களின் உதவியுடன் பாடசாலை மாணவிகளை நிர்வாணமாக்கி வீடியோக்களை எடுத்திருந்தனர். அதுபோல யாழ்ப்பாண நகர்புறத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரிடம் இருந்து அண்மையில் ஹெரோயின் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இது தவிர க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையிலும் – உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் வடக்கு மாகாணமே ஒன்பதாவது நிலையில் உள்ளது. (இலங்கையில் ஒன்பது மாகாணங்களே உள்ளன)

இது தான்  வடக்கின் அண்மைய கால கல்வி நிலை.

இவ்வாறான ஒரு நிலையிலிருந்து வடக்கின் கல்வியை மீட்பதற்கு மிகப்பெரும் பொறுப்போடு செயல்பட வேண்டிய தேவை வடக்கு தமிழர் கல்வி வளர்ச்சியின்  மிகப்பெரிய மத்திய நிலையம் என கடந்த காலங்களிலிருந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இன்று வரை இதன் தேவையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உணரவே இல்லை என்பதே ஆக வேதனையான விடயம்.

வருடா வருடம் என்ன சம்பவங்கள் நடக்கின்றனவோ அல்ல இல்லையோ பகிடிவதை தொடர்பான ஏதேனும் ஒரு பெரிய குற்றம் பதிவாகிவிடும். விசாரணைகள் தீவிரமாக நடக்கின்றன மாணவர்களுக்கு வகுப்பு தடைகள் வழங்கப்பட்டன என  சில செய்திகள் வெளியாகுமே தவிர பகிடி வதைகளை முழுமையாக இல்லாது செய்ய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் யாழ்.பல்கலைகழக சமூகம் மேற்கொண்டதாக இதுவரை  தெரியவில்லை.

இந்த நிலையில் அண்மையில்  பல்கலைக்கழகத்திற்கு தெறிவாகியுள்ள புதுமுக  மாணவர்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் காட்டுமிராண்டிகள் போல அடித்து சித்திரவதைப்படுத்தியுள்ள  ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்;

யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த . கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது . அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி , மாணவர் ஆலோசகர் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று புதுமுக மாணவர்களை சிரேஷ்ட மாணவர்களிடம் இருந்து மீட்டுள்ளனர் . அதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது . அதேவேளை சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் தனது பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளததாக பல்கலைக்கழக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் மேற்கொண்ட பகிடிவதைகள் நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என இலகுவான தண்டனை ஒன்றையும் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது பகிடிவதைகள் தொடர்பில் யாழ்.பல்கலைகழகத்தின் பொறுப்பற்ற அறிவிப்பாகவே பார்க்க முடிகிறது.

முன்னைய காலப்பகுதிகளில் தமிழர் சமுகத்தின் உரிமை சாரந்த பிரச்சினைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் குரல்கொடுத்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து முழுமையாக வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதையே பகிடிவதை தொடர்பான தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியும் வெறுமனே பாடசாலை கல்வி போல புத்தகங்கள் வழியானதாக  மட்டுமே மாறிப்போயுள்ள நிலையில் மாணவர்களை சமூகத்துக்கு உரியவர்களாக மாற்றாது புத்தகப் பூச்சிகளாக மாற்றி அனுப்புவதை மட்டுமே இந்த யாழ்ப்பாண  பல்கலைக்கழகம் செய்து கொண்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களே முழு காரணம். தற்போதைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் சில விரிவுயாளர்களை தவிர ஏனைய விரிவுரையாளர்கள் ஒரு உழைப்பதற்கான தளமாக மட்டுமே பல்கலைக்கழகத்தை மாற்றியுள்ளனர் – பார்க்கின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு நிலை மிகப் பெரிய விரிசலிலேயே இன்று வரை காணப்படுகின்றது. “எனக்கு சம்பளம் வருகிறது நான் அவர்களுக்கு கற்பிக்கிறேன்“ இந்த மனோநிலையை பல்கலைகழகத்தில் பாதிக்கும் அதிகமான விரிவுரையாளர்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் மாணவர்களிடம் அடிப்படை மனிதாபிமானம் பற்றியோ – பல்கலைகழக மாணவர்களின் சமூகப் பொறுப்பு பற்றியோ மறந்தும் கூட பேசுவது கிடையாது. பிறகு எவ்வாறு ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றின் உருவாக்கத்தை  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து எங்களால் எதிர்பார்க்க முடியும்..?

முன்பெல்லாம் தங்களுடைய பிள்ளைகளை சைக்கிள்களிலும் – மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிச் சொல்லும் பெற்றோர் யாழ்.பல்கலைகழக வளாகத்தை கடக்கும் போது இந்த பல்கலைக்கழகத்துக்கு பிள்ளையை எப்படியாவது படிக்க அனுப்ப வேண்டும் என எண்ணுவர். ஆனால் இந்த பகிடிவதை கலாச்சாரத்தாலும் – முறையற்ற கற்பித்தலாலும்  இன்று நிலை தலைகீழாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வேண்டாம் என கூறும் நிலை பெற்றோர் மத்தியில் உருவாகியுள்ளது.

தமிழர் பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான  நடவடிக்கைகளுக்காகவும் – சமூக மாற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வடக்கின் மிகப்பெரிய கல்வி நிலையம் என்ற அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆனால் இதன் பெறுதியை அங்குள்ள விரிவுரையாளர்களும் சரி மாணவர்களும் சரி உணர்ந்து கொண்டு உள்ளார்களா..? என்றால் இல்லை என்பதே விடை.

தமிழர் பகுதிகளில் இன்னமும் சீர்படுத்தப்பட வேண்டிய எத்தனையோ  சமூகப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை முன்னின்று தீர்ப்பதில் யாழ்.பல்கலைகழக மாணவர்களதும் – பல்கலைக்கழக சமூகத்தினதும் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் பொறுப்பற்ற இந்த மாணவர்கள் இன்னமும் வன்முறையை வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த பகிடிவதைகளில் ஈடுபடும் இதே மாணவர்கள் இன்னமும் கொஞ்ச நாட்களில் பட்டமும் பெற்றுக்கொண்டு அரச வேலைகளில் – ஆசிரியர்களாக பாடசாலைகளில்  புகுந்துவிடுவார்கள். பின்பு இவர்கள் இவர்களை போல வன்முறை குணம் கொண்ட ஒரு சமூகத்தை தான் உருவாக்க போகிறார்களே தவிர ஆரோக்கியமான சமூக்த்தை அல்ல.

நீண்டகாலமாக பகிடிவதைக்கான ஆகப்பெரிய தண்டனையாக வகுப்புத்தடைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் எந்த மாற்றமுமே வரப்போவதில்லை. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத இழிவான செயல்களை செய்யும் இந்த மாணவர்களை நேரடியாகவே பல்கலைக்கழக கல்வியில் இருந்து நீக்கிவிடுவதே இந்த பகிடிவதைக்கான தீர்வு. அல்லாது விடின் இது வாழையடி வாழையாக இனிமேலும் தொடரத்தான் போகிறது.

அடிப்படை மனிதாபிமானத்தை கூட கற்றுத் தர முடியாத கல்வியால் என்ன பயன்..?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • BC
    BC

    மிகவும் வெட்கபட வேண்டிய நிலை.

    Reply