தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தீர்வு குறித்து தீர்மானிப்பதில் தாமதம் – ஜனாதிபதி

mahinda-rajapaksha.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

“ஏசியன் ட்ரிபியூன்’ இணையத்தளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கியிருக்கும் போட்டியொன்றிலேயே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்ட நிலையில் எப்படி நாம் அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து திட்டமிடுவது என ஜனாதிபதி ராஜபக்ஷ கேள்வி யெழுப்பியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 3 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளித்திருக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். மனித கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் சில சமயம் விடுபட்டு வந்து விட்டால் பிரபாகரனுக்கு அவரது முகத்தை மறைத்துக் கொள்ள இடமில்லையென்று அவர் அச்சம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன். எனினும், அவர்களோ தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் இந்தியாவின் வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள தலைவர்களிடம் எமக்கு பலவற்றை கூறுமாறு வலியுறுத்துகிறார்கள். இது அர்த்தமற்றதொன்றல்லவா? நாம் அவர்களுக்கு சந்தர்ப்பமளித்து எப்போதும் செவிமடுக்க ஆர்வமாக இருந்து பொறுப்பான கோரிக்கைகளுக்கு உறுதியளிக்கவும் அவர்களது நிலைப்பாடுகளை எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கத் தயாராகவும் இருக்கின்ற போதும் அவர்கள் அதை செய்வதாக இல்லை. எனினும், தமிழ் நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.  இதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஓய்வு என்பதை முற்றாக நிராகரித்துள்ளார். இராணுவ நடவடிக்கை நிறுத்தத்தை புலிகள் மதிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாதென அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கி நடவடிக்கைகளை ஓய்வுக்குக் கொண்டு வந்திருந்தது எனினும் அவர்கள் அந்த நல்லெண்ண சமிக்ஞையை மதிக்கத் தவறிவிட்டதுடன் அப்பாவிப் பொதுமக்களையும் பாதுகாப்பான இடம்நோக்கி நகர அனுமதிக்கவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அத்துடன், நல்லெண்ண சமிக்ஞையாகத் தாக்குதல்களை இடை நிறுத்தி வைக்குமாறு அரச படையினர் கோரப்பட்டிருந்த போதிலும் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  தாக்குதல்களை நிறுத்துமாறு படையினர் கோரப்பட்டிருந்தனர். எனினும், 24 மணி நேரம் கூட செல்வதற்கு முன்னர் புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததால் இறுதியில் அது நூற்றி ஐம்பது படையினர் காயமடையும் நிலைமையை ஏற்படுத்தியிருந்தது என்று மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இதேநேரம், யுத்த சூனிய காலப்பகுதியென்பது சாத்தியப்படாத யோசனையாகவே இருக்குமென ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முன்னரான எமது சமிக்ஞைகளை மதிக்காத பிரபாகரனும் அவரது ஆட்களும் எனது கட்டளையின் பேரில் 48 மணி நேரத் தாக்குதல் தவிர்ப்பில் இருந்த எமது படையினர் காயமடைய காரணமாயிருந்திருக்கும் நிலையில் எப்படி மீண்டுமொரு முறை 48 அல்லது 72 மணிநேர யுத்த சூனிய காலப்பகுதியை வழங்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமக்கு எந்தவொரு போர் நிறுத்தம் பற்றியோ அல்லது யுத்த சூனிய காலப்பகுதி பற்றியோ சிந்திக்க முடியாது. கடைசியாக நாம் அறிவித்த போது புலிகள் அதை மதிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் எமது படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். தாக்குதல் நிறுத்தத்தில் இருக்கும் போது இலங்கை இராணுவத்தினர் தாக்கப்பட்டால் முப்படைத் தளபதி என்ற வகையில் அதற்கான பொறுப்பை நானே ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *