ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?

கோட்டபாய ராஜபக்சவை ஏன் மேற்குலகு வெறுத்தது? கோட்டபாய ராஜபக்ச தமிழர்களை இனப்படுகொலை செய்ததால் மேற்குலகம் அவரை வெறுப்பதாக எண்ணினால் அது மிகப்பெரும் முட்டாள்தனம். இலங்கையின் வடக்கில் 2009இல் இனப்படுகொலை இடம்பெற்றதாக எந்த சர்வதேச மனிதஉரிமை அமைப்பும் குற்றம்சாட்டவில்லை. யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை பச்சையாகச் சொன்னதற்காக புலித் தமிழ் தேசியம் சுமந்திரனை துரோகியாக்கியது. மேற்குலகிற்கு ஒன்றும் தமிழரில் காதல் கிடையாது. மனித உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் நேட்டோவும் உலகம் முழுக்க மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடைய மோசமான மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தியதற்காக யூலியன் அசான்ஜ்சை தூக்கில் தொங்கவிட அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் எல்லாக் குளறுபடிகளையும் மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க – ஐஎம்எப் க்குப் பணியாமல் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டாடுவதால் கோத்தபய ராஜபக்சவை விரட்டியடிக்கும் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விடயத்தில் காலிமுகத்திடல் அரகலியாக்கள் உதவியோடு மேற்குலகம் உச்சகட்ட வெற்றியைப் பெற்றது. அரகலியாக்கள் முன்வைத்த ‘கோட்ட கோ கம – கோட்டா கோ ஹோம்’ அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை அவர்களுக்கு அளித்தது. அமெரிக்க – ஐஎம்எப் சார்பு போராட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த மேற்கத்திய மோகசக்திகள், படித்து முன்னேறிய ‘கபே லாற்றே – cafe latte’ குடிக்கும் லிபரல்கள், இடதுசாரிகள், ஜேவிபிக்கள் மற்றும் எதுவுமே புரியாமல் கும்பலில் கோவிந்தா போட்டவர்கள் எல்லோரும் பங்கெடுத்தனர்.

இவர்களின் தீவிர போராட்டத்தால் பெற்றோலுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட்டு குறைந்தபட்ச ரயில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டது. மேலும் மானியங்களைக் குறைக்கவும் பொதுத்துறைகளுக்கான செலவீனங்களைக் குறைத்து வட்டியைக் கட்டுவதற்கு ஐஎம்எப் அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுநாள் வரை இலங்கை மக்கள் அனுபவித்து வந்த இலவசக் கல்வி, இலவச மருத்துவம், ஓரளவு தரமான வாழ்க்கை முறையை படிப்படியாகக் குறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. கோத்தபாய ராஜபக்ச இவற்றுக்கு உடன்பட மறுத்து, இறக்குமதிகளை முற்றாக நிறுத்தி, சீனா – ரஷ்யா ஊடாக இப்பிரச்சினையில் இருந்து மீள முடிவு செய்ததால் அமெரிக்க – ஐஎம்எப் நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட மறுத்ததால் இலங்கையில் ஒரு ஆட்சி-ஆள் மாற்றத்தை அமெரிக்க – ஐஎம்எப் முடுக்கிவிட்டிருந்தது. அதன் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டி அடிக்கப்பட்டார்.

ராஜபக்சாக்களின் மீள் எழுச்சி தவிர்க்க முடியாதது:

இன்றைய பொருளாதார நெருக்கடி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் அமெரிக்க – ஐஎம்எப் ஆல் நிர்ப்பந்திக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் விளைவு. மேலும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையை அடுத்து 1980க்களின் முற்பகுதி முதல் இப்பொருளாதார நெருக்கடி முளைவிட ஆரம்பித்துவிட்டது. நாட்டின் மூலப்பொருட்களையும் அந்நாட்டு தொழிலாளர்களுடைய உழைப்பையும் அடிமட்ட விலைக்கு வாங்கி தங்களுடைய நிறுவனங்கள் மூலம் முடிவுப்பொருட்களாக்கி அதனை உச்ச விலைக்கு அந்நாடுகளுக்கே விற்று உச்ச லாபம் ஈட்டும் அமெரிக்க ஐஎம்எப் கொள்கை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த மொட்டுக் கட்சி – ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜன பெரமுன என்பன புரட்சிகர சமவுடமை பொருளாதாரக் கொள்கையை உடைய கட்சிகள் அல்ல. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போல் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க திறந்த பொருளாதாரக் கொள்கையின் காப்பாளர்களில் ஒருவர். அதனால் ரணில் மீது மேற்குலகுக்கு ஒரு காதல் எப்போதுமே இருந்து வந்தது. ரையும் கோட்சூட்டும் போடும் ரணிலுக்கும் ‘கபே லற்றே’ குடிக்கும் லிபிரல்களுக்கும் ஒருவித காதல் கிளர்ச்சி இருக்கும். இவர்களுக்கு வேட்டி சறம் கட்டித் திரியும் சிவப்புத் துண்டை போட்டுத்திரியும் ராஜபக்சக்களை கண்டால் பட்டிக்காட்டான் கிராமத்தான் என்கிற மனப்பதிவொன்று இருக்கும். இதுகூட காலிமுகத்திடலில் காணக்கூடியதாக இருந்திருக்கும். அங்கு வேட்டி சறத்தோடு யாரையும் கண்டிருக்க முடியாது.

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்சக்களின் தலையில் கட்டி, அதற்கு சீனாவுடந்தை என்று திரித்து ராஜபக்சாக்களை ஓரம்கட்டுவதன் மூலம் இலங்கையை மேற்குலகுக்கு, அமெரிக்க ஐஎம்எப் ற்கு சாதகமாக வைத்திருப்பதே நடந்து முடிந்த காலிமுகத்திடல் போராட்ட நாடகத்தின் சாரம்சம். இதே மாதிரியான மைத்திரி – ரணில் மூலமாக நிறைவேற்றப்பட்ட நாடகமே தேசிய நல்லாட்சி அரசு. அதனை அரங்கேற்றும் வேளை முன்னாள் பிரித்தானிய பிரதமரும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையுமான ரொனிபிளேயர் இலங்கையில் இரு வாரங்கள் சத்தமில்லாமல் தங்கி இருந்தார். அப்போது தான் இரவு ராஜபக்சவோடு அப்பம் சாப்பிட்ட மைத்திரி காலையில் ராஜபக்சக்களுக்கு ஆப்பு வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆனாலும் சில ஆண்டுகளிலேயே ராஜபக்சக்கள் சூழியோடி மீண்டும் மிகப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோவை போட்டுத்தள்ள அமெரிக்க உளவுநிறுவனமான சிஐஏ 600 தடவை முயற்சித்தும் தோல்வி கண்டது. அதே போல் எமது உள்ளுரில் கஸரோவை போல் தொப்பி அணிந்த டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய புலிகள் 13 தடவைகள் முயற்சித்து தோல்வி கண்டனர்.

அதனால் ராஜபக்சாக்களுக்கும் – அமெரிக்க ஐஎம்எப் க்கும் நடக்கும் ரொம் அன் செரி விளையாட்டு சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. இப்போதைய விளையாட்டில் ரணில் பலிக்கடாவாகி விட்டார். இவரைக் காட்டிலும் ராஜபக்சாக்கள் மேல் என்ற உணர்வு ரணில் பதவியேற்ற 48 மணி நேரத்தில் சஜித் பிரேமதசவால் தெரிவிக்கப்பட்டது. இந்த மனநிலை ஏற்கனவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. ராஜபக்சாக்கள் மீண்டும் இலங்கை கிராமங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலர்களாக எழுந்து வருவது தவிர்க்க முடியாதது.

ராஜபக்சாக்களை கையாளக்கூடிய சிந்தனைத் திறனும் அரசியல் திறனும் லிபரல்களிடமும் மாணவர்களிடமும் இடதுசாரிகளிடமும் இல்லை. இவர்களிடம் அதற்கான அர்ப்பணிப்பும் கிடையாது. இதனால் இவர்கள் உயர்ந்த கொள்கைத்திட்டங்களைக் கையில் எடுக்காமல் ‘கோட்டா கோ கம, ரணில் கோ கம, ஒக்கம கோ கம’ என்ற புலம்பல் கோசங்களை வைத்து குட்டையைக் கிளப்பி நாட்டை சீரழிப்பதை மட்டுமே செய்வார்கள். இதுவே அரப் ஸ்பிரிங்கில் நடந்தது. அது ஆரம்பித்த துனிஸியாவில் நேற்று யூலை 27 பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியின் சர்வதேச பரிமாணம்:

இன்றைய பொருளாதார நெருக்கடி ஒன்றும் இலங்கைக்கேயானதல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகிலேயே மோசமானதும் அல்ல. செல்வந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடையாத நாடுகள் என்று உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இலங்கையில் மட்டும் தான் பொருளாதார நெருக்கடியை ஆட்சித் தலைவர் மீது போட்டுக்கட்டி ஆட்சியை மாற்றினால் பெற்றோல் வரும் எரிவாயு வரும் என்றும் நம்பினர். ஆட்சித் தலைவரை வீட்டுக்கு அனுப்பினால் தங்கள் பெற்றோல் ராங்குகள் நிரம்பும் என்று நம்பினர். ஐரோப்பாவில் உள்ள துருக்கியின் விலைவீக்கம் 80 வீதம். அபிரிக்க நாடான கமரூனில் விலைவீக்கம் 250 வீதமாக அதிகரித்து. அங்கு மக்கள் போராடுவதற்கு பதிலாக மாற்று பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆறு மாதம் காலிமுகத்திடலில் கிடந்ததற்குப் பதிலாக வீடுகளில் தோட்டத்தில் நான்கு கன்றுகளை வைத்திருந்தால் காய்கறியாவது கிடைத்திருக்கும். நாடு சுமுகமாக உள்ளபடியால் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளுர் உற்பத்தியை பெருக்கவும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி தற்போதுள்ள மின்சாரப் பிரச்சினையை கையாள்வது பற்றி சிந்தித்து இருக்கலாம். துவிச்சக்கர வண்டிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முயற்சித்திருக்கலாம். இது எதுவுமே செய்யாமல் இலவசக் கல்வியும் தந்து அது முடிய ராஜபக்சக்கள் அவர்களுக்கு வேலையும் எடுத்துக் கொடுக்க வேண்டும். பிறகு இந்த வேலைக்குப் போய் வேலை செய்யாமல் பொழுது போக்கிவிட்டு வர சம்பளமும் வழங்க வேண்டும். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?

ராஜபக்சாக்களின் சொத்துக் குவிப்பு புலம்பல்கள்:

ராஜபக்சாக்களோ மற்றும் அரசியல் வாதிகளோ ஒன்றும் காமராஜர் போல் தன்மூத்திரம் அருந்தி ஒரு சதத்தைக் கூட களவாடாதவர்கள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்த, யுத்தத்தில் சீரழிந்த கிளிநொச்சி மண்ணில் இருந்து பாராளுமன்றம் வந்த சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனால் ஒரு பத்து ஆண்டு காலத்தில் கணிசமான சொத்துக்களை சேர்க்க முடியுமானால், பரம்பரை அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த, குடும்பமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்சாக்கள் சொத்து வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போது ஆளும் கொன்சவேடிவ் கட்சித் தலைமைக்கு போட்டியிடுபவருமான ரிஷி சுனாக் பிரித்தானியாவிலேயே மிகச் செல்வந்தரான அரசியல் வாதி. அவரும் ஒன்றும் புனிதரல்ல. அதே போல ராஜபக்சாக்கள் ஆட்சிக் வருவதற்கு முன்னரே 2005இல் 400 கோடி ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு கொடுத்துத் தான் ஆட்சியைக் கைப்பற்றினர். வே பிரபாகரனிடம் 400 கோடி கொடுத்திருந்தால் அவர்கள் எத்தினை கோடிகளுக்கு அதிபதியாக இருந்திருக்க வேண்டும்? மேலும் பணம் பணத்தை உருவாக்கும். புலம்பெயர் தேசங்களில் ஒரு சதம் இல்லாமல் வந்த புலிகளுக்கு பணம் சேர்த்த பலர் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆகவே ராஜபக்சக்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ஆனால் ஆட்சிக்கு வந்து தான் கொள்ளையடித்தார்கள், அவர்கள் கொள்ளையடித்து தான் நாடு வங்குரோத்தில் போனது என்பதெல்லாம் உப்புச்சப்பற்ற வாதம். ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விடயங்கள். பிரபல இணைய ரக்ஸி நிறுவனமான ஊபர் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மக்ரோனுக்கு வழங்கியது 600,000 டொலர்கள் (21 கோடி இலங்கை ரூபாய்).

ராஜபக்சாக்கள் சில மமதையான முட்டாள் தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில் கல்வியில் தேர்ந்தவர்கள், திறமைசாலிகளும் கூட. அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்களால் வேரோடு சாய்க்க முடிந்தது. அவர்களுடைய இத்திறமைகளை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகளும் ராஜபக்சக்களால் பாதிக்கப்பட்டவர்களும் இன்று முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக விக்கிரமாதித்தன் கதைபோல் ராஜபக்சக்கள் பற்றி கதையளக்கின்றனர். கதையளந்து சுய இன்பமடைகின்றனர். அதே போல் புலித் தேசியத்தில் ஊறிப்போன தமிழர்களுக்கும் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் முதிர்ச்சி இன்னமும் இல்லை. இதேநிலை தான் முஸ்லீம்களுக்கும். ஏதாவது வகையில் ராஜபக்சக்களை தாழ்த்தி நையாண்டி செய்து சிற்றின்பம் அடைகின்றனர்.

அப்போது 1980க்களின் இறுதியில் பிலிப்பைன்ஸில் மக்களைக் கொளையடித்து சூறையாடிய பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் தன் பெற்றோர் செய்த சாதனைகளைச் சொல்லி தற்போது அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியேறி உள்ளார். ஆனால் ராஜபக்சக்கள் பேர்டினனட் மார்க்கோஸ் தம்பதிகளளவுக்கு கீழ் நிலையை அடையவில்லை. இன்றும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் அவர்கள் நிலைகொண்டுள்ளனர். அதனால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற கனகாலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை.

இலங்கையில் ஊடகங்களும் ஆய்வாளர்களும் எவ்வித கேள்வியும் இன்றி ஆய்வும் இன்றி தங்களுக்கு சுய கிளர்ச்சியூட்டம் விடயங்களை எழுதுகின்றனரே அல்லாமல் தகவல்களைச் சரி பார்ப்பதில்லை. அதனால் அடிப்படைப் புரிதல் இன்றி வெறும் உணர்ச்சிக் கிளர்ச்சி அரசியலே இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபடும் லிபரல்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மோகத்திலேயே இன்னமும் உள்ளனர். அவர்களிடமும் இலங்கையின் அந்நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றிய கரிசனை இல்லை. இந்தப் பினனணியில் போராட்டங்கள் பலனளிப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாகவே உள்ளது. அதனால் ராஜபக்சாக்களின் எதிர்காலத்திற்கு அவ்வளவு பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளுரில் இல்லை. ஆனால் அமெரிக்க கூட்டுகள் ராஜபக்சாக்களுக்கு எப்படியும் ஒரு பாடம் படிப்பிக்க கங்கணம் கட்டிவிட்டனர். இந்த நெருக்கடி ராஜபக்சாக்களுக்கு இருக்கும். கோட்டபாயாவின் உள்ளாடையை வைற் ஹவுசில் காட்சிக்கு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment