சிங்கள தரப்பினரிடமிருந்து நாம் ஏமாறியதைக் காட்டிலும் தமிழ் தரப்பினரிடமிருந்து ஏமார்ந்தமையே அதிகமாக உள்ளது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் காரியாலயம் இன்று (01) திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால், அது தமிழர் தரப்பிற்கான தீர்வினை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், அவ் அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற வேளையிலே தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பில் பேசப்பட்டு அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.
கோட்டா கோ கம போராட்டத்தின் ஈடுபட்ட இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தினால் கைது செய்யப்படுகின்ற நடவடிக்கையினை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் என்பதையும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.