போராட்டத்தால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததா? இல்லையெனில் அவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்று நாமல் ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு பதில் அழிக்கும் முகமாக “எனது தந்தையாராகட்டும், அநுரகுமார திஸாநாயக்கவாகட்டும், சஜித் பிரேமதாசவாகட்டும், டலஸ் அழகப்பெருமவாகட்டும், நம் அனைவரின் அரசியல் பயணம் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிளர்ச்சியை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஜனநாயக ரீதியிலான தேர்தலில் எம்மை வெற்றி பெறச் செய்யவோ அல்லது தோல்வியடையச் செய்யவோ மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் போராட்டத்தை நடத்துவதில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகளும் யோசனைகளும் மிகவும் பெறுமதியானவை. போராட்டத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும், போராட்டக்காரர்கள் சிலருடன் எனக்கு பிரச்சனை இருக்கிறது. செயற்பாட்டாளர்கள் எப்பொழுதும் ஜனநாயக விரோதக் கிளர்ச்சியுடன் அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்பட்டால், வன்முறையைப் பரப்ப முற்பட்டால், தேசியத் தொலைக்காட்சி அல்லது அரசு நிறுவனங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, அந்த அரசாங்கச் சொத்துக்களைக் கைப்பற்றுவதே செயற்பாட்டாளரின் எண்ணமாக இருந்தால் அத்தகைய செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
எனவே, ஜனநாயகத் தேர்தல் மூலம் தான் நம் அனைவரின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்” என்று பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நாமல் ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.