ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகிறார் சி.வி. விக்னேஸ்வரன் !

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் 30 அமைச்சர்களும், 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படும் அதேவேளை, தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவிகள் மாறும் எனவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும்போது போது தமது உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த நாட்களில் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நிமல் லன்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்க பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

……………………….

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டதாக கூறப்பட்ட மக்கள் போராட்டத்தின் முடிவில் கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகினார். தொடர்ந்து அடுத்த ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்தேசிய கட்சிகளின் முடிவு இறுதிவரை குழப்பமானதாகவே கூறப்பட்டது. இறுதியில் ராஜபக்சக்களை ரணில் பாதுகாத்தார் என கூறி  தமிழ்தேசிய கூட்டமைப்பு டலஸ்அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்ததது. எனினும் கூட்டமைப்பில் சில எம்.பிக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ரகசியமாக வாக்களித்ததாக கூறப்பட்டது. மேலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தேர்தலை புறக்கணித்ததது. எனினும் சி.வி.விக்கினேஸ்வரன் தேர்தலுக்கு முதல்நாள் இரவில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *