இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது.
சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த வேண்டுகோளை சீன தூதரகம் முன்வைத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் செல்வது குறித்து இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு சீனாவிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கையின் முக்கிய அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை சீன தூதரகம் இன்று கோரியுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
கப்பல் பயணத்தை தாமதிக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த வேண்டுகோள் கிடைத்ததும் இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அனுமதியை தூதரகம் கோரியுள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் இந்திய கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், சீனாவிடம் குறித்த கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.