ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து இப்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான தேவையோ, அவசியமோ இப்போது கிடையாது. ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தாபய ராஜபக்ஸ விலகியமையை அடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியும் கலைந்து போய் விட்டது. ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பாக அவர்களுடன் நேருக்கு நேர் மிக கடுமையாக முரண்பட்டு கொண்டு வெளியேறியவன் நான் என்பதை இத்தருணத்தில் நினைவு படுத்துகின்றேன்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று நீங்கள் சொல்வது என்ன? என்று பல நூற்று கணக்கானோர் திரண்டிருந்த உயரிய சபையில் வைத்து கோத்தாபய ராஜபக்ஸவை நான் வினவினேன். அவருக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது என்றும் அதை அவர் அறிந்து கொள்வதற்காகவேதான் செயலணி அமைத்து இருக்கின்றார் என்றும் எனக்கு கோத்தாபய ராஜபக்ஸ பதில் தந்தார்.
எனவேதான் அவர் பதவி விலகியமையுடன் அந்த செயலணியும் இறந்து விட்டது, செயல் இழந்து விட்டது. சிலர் அதை பற்றி இப்போது பேசுவது நகைச்சுவையாக, கோமாளித்தனமாக தெரிகின்றது. ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது , செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.