எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெற வேண்டும் என எவரேனும் கூறினால் அவர்கள் முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது.
தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்ததாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.