தாய்வானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனாவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி தாய்வான் சென்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, தாய்வானை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டின் எல்லையில் போர் விமானங்கள், போர் கப்பல்களை அனுப்பி தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்த பதற்றம் தணிவதற்குள், பெலோசியை தொடர்ந்து 5 அமெரிக்க எம்பி.க்கள் குழு நேற்று தாய்வானுக்கு சென்றது. தைபே நகரில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில், அமெரிக்க அரசு விமானம் நேற்றிரவு தரையிறங்கும் வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அமெரிக்க எம்பி.க்கள் குழுவின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
நான்சி பெலோசியின் அண்மைய பயணத்தால் கடும் கோபமடைந்த சீனா,தாய்வானைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அனுப்பி, வான்வழியாகவும் கடல் வழியாகவும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.