முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இதுவரை எந்த அறிவித்தலினையும் வெளியிடவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இதுவரை எந்த அறிவித்தலினையும் வெளியிடவில்லை . அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பார் என தாம் நம்பவில்லை. இந்த நாட்டின் சாதாரண குடிமக்களுக்குக் கிடைக்கும் சுதந்திரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் கிடைக்க வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து இந்த நாட்டிற்கு வந்து மக்களுக்காக பணியாற்றினார். எனவே அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்க முடியாது. இது அவரது மனித உரிமையை மீறுகின்ற செயல்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அவர் இந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையானோர் இன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவது தங்களை விட அவர்களுக்கு இலகுவானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.