இலங்கையின் வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவுடையதே – IMF கடனை பெறுவதில் புதிய சிக்கல் !

இலங்கையின்  வெளிநாட்டு கடனில், பாதியளவான கடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டுள்ளதாக இலங்கை நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ, கடன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு சீனாவின் நிலைப்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

2022, ஆகஸ்ட்டில், நிதி அமைச்சின் கடன் வழங்குநர் பட்டியல் இற்றைப்படுத்தலின்படி, இலங்கையின் மொத்த இரு தரப்புக் கடன் 10 பில்லியன் டொலர்களாகும். இதில் 44 சதவீதமானவை கடந்த ஆண்டு இறுதி வரை சீனாவிடம் இருந்து வாங்கிய தொகைகளாகும். அத்துடன், ஜப்பானிடம் 32 சதவீதமும், இந்தியாவிடம் 10 சதவீதமும் கடன்களாக பெறப்பட்டுள்ளன. தென் கொரியா மூன்று சதவீதத்திலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்வீடன், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா இரண்டு சதவீதத்திலும் உள்ளன.மீதமுள்ள ஒரு சதவீத கடன், சவூதி அரேபியா, அமெரிக்கா, குவைத், ஸ்பெயின் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வழங்கியவையாகும். இதில் அரசாங்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இருதரப்பு கடன் 3 பில்லியன் டொலர்களாகும்.

இந்த வெளிநாட்டு நாணயக் கடனுக்கான வட்டியாக சராசரியாக 2.9 சதவீதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உள்ளூர் நாணயக் கடனுக்கான வட்டி வீதம் 9.3 சதவீதமாக உள்ளது. எனினும் வெளிச் சந்தைக் கடன்கள் – சர்வதேச பிணை பத்திரங்கள் என்பன நிதி அமைச்சின் கடன் விளக்கங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அடுத்த கட்டம், சர்வதேச நாணய நிதியம் உடனான கலந்துரையாடல்களை இறுதி செய்வதாகும் என்று நிதி அமைச்சு கூறுகிறது. இதனை தொடர்ந்து, கடன் வழங்குநர்களைப் புதுப்பிக்க ஒரு பொது முதலீட்டாளர் கடன் விளக்கத்தை தயாரித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவதாகும் என்று தெரிவிக்கப்படுள்ளது. சர்வதேச நாணய நிதிய குழுவின் அனுமதியை அடைவது மிகவும் முக்கியமானது. இதற்கு முன்னர், கடன் கொடுத்தவர்களுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதே இறுதி கட்டமாக இருக்கும். இந்தநிலையில், பொருளாதார மற்றும் நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் எதிர்வரும் 24 -31 வரை கொழும்புக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *