“சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் , இந்த வங்குரோத்து நிலைமையால் தங்களின் வாழ்க்கை அழிவடைந்தமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்களை தண்டிப்பதை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்துக்கு தற்போது சவாலாக இருப்பது மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாகும்.
அதனால் அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். யாராவது சட்டத்தை மீறி செயற்படுவதாக இருந்தால், அதளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாங்கள் எதிர்ப்பு இல்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
அத்துடன் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்த ராஜபக்ஷ்வினர் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்து செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் மீண்டும் தங்களின் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றனர்.
அதனால் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் தேசிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு அமையாவிட்டால் இதுதொடர்பில் அடிப்படை நம்பிக்கை இல்லாமல்போகும்.
மேலும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் நாட்டை வங்குராேத்து அடையச்செய்ய காரணமான இருந்த அரசியல்வாதிகள் இல்லாத நாட்டையே . அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் எந்தவகையான அடக்கு முறைகளை கொண்டுசென்றாலும் மக்கள் போராட்டத்துக்கு செல்வதை தடுக்க முடியாது என்றார்