ஆறு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் முன்னெடுப்பில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அடிப்படையாகக் கொண்டு உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இந்த வரைபு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசங்கள் வழங்குவது அர்த்தமற்றது என குறித்த வரைபில் தமிழ் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை (Veto Power)பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற நிலைப்பாடு குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவது தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கருத்துகள் ஆதாரமற்றவை எனவும் இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான், ஐ.நா பாதுகாப்பு பேரவையின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வில்லை என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியுள்ள வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்காக தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோருகின்ற நீதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை முன்நிறுத்த பாதுகாப்பு பேரவையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த வரைபில் வலியுறுத்தப்பட்டுள்ளது.