மீண்டும் தொடங்கும் மிடுக்கு – 2021 உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடம் – மாவட்ட அடிப்படையில் மன்னார் முதலிடம் !

கடந்த காலங்களில் தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன. மாகாண அடிப்படையில் 8, 9 இடங்களையே வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றிருந்தன. தமிழர் பகுதிகளின் கல்விச்சூழல் தொடர்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை மிகத்தெளிவாக அவதானிக்க முடிந்ததது.

இந்த நிலையில் அண்மையில் வெளியாகியிருந்த 2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மீண்டும் வடக்கு – கிழக்கு பகுதியை சேர்ந்த தமிழ் மாணவர்கள் தங்களுடைய திறமையை சிறப்பாக வெளிப்டுத்தியுள்ளதை காண முடிகின்றது.

No description available.

2020ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தை பெற்றிருந்ததது. வடக்கு மாகாணம் 06ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் படி பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் பெறுபேற்றின் (2021) படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் . 11237 மாணவர்கள் பல்கலைகழக அனுமதிப்பிற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் மாகாண அடிப்படையில் மூன்று இடங்கள் முன்நோக்கி நகர்ந்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. 2020ஆம் ஆண்டின் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சுமார் 1500 மாணவர்கள் வரையில் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியிருந்தனர். எனினும் இந்த நிலையில் இந்த வருட பெறுபேறுகள் ஓரளவு சிறந்த முன்னேற்றத்தை காட்டுகின்றன. வடக்கு மாகாணத்திலிருந்து 2021ல் பரீட்சைக்கு தோற்றிய 12388 மாணவர்களில் சுமார் 8000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைகழக கற்கைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

No description available.

2021 உயர்தர பெறுபேறுகளில் மாவட்டங்களின் அடிப்படையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

2020 பரீட்சை பெறுபேறுகளின் படிவடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தன. முதல் 5 இடங்களுக்குள் எந்த வடக்கு – கிழக்கு மாகாண மாவட்டங்கள் எவையுமே இடம்பெற்றிருக்கவில்லை.

தமிழர்கள் மீதான இன அடக்குமுறையின் ஒரு வடிவமாக வடக்கு – கிழக்கு பகுதி தமிழர்களின் கல்வி நிலையை வீழ்த்துவதில் பல சதிகள் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டின் உயர்தர  வடக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் இதன் நீடித்த தாக்கத்தின் விளைவை வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருந்தன. யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய வடக்கின் மாகாணங்கள் பாரிய பின்டைவை சந்தித்திருந்தன.

மாவட்ட அடிப்படையில் வடக்கில் போரினால் அதிகம்  பாதிக்கப்பட்ட பிரதேசங்களான முல்லைத்தீவு 17ஆவது இடத்தினையும், கிளிநொச்சி 21 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தன. இதுதவிர மாவட்ட அடிப்படையில் மட்டக்களப்பு 21ஆவது இடத்தினையும், வவுனியா இறுதி இடமான 25வது இடத்தையும் பெற்றிருந்தது.

 

 

 

No description available.இந்த நிலையில் வெளியாகியுள்ள  2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைகழகத்தெரிவுக்கான அடிப்படை தகுதியை பெற்றுள்ள மாணவர் தொகையினடிப்படையிலான  பகுப்பாய்வின் படி  வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்கள் கனிசமானளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

 

மாவட்ட அடிப்படையிலான பெறுபேறுகளின் படி (அதாவது தோற்றுகின்ற மூன்று பாடங்களிலும் சித்தியடைவதுடன் –  common general test லும் சித்தியடைவோரின் தொகையின் படி ) மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என்பன முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட பெறுபேறுகளின் படி 10ஆவது இடத்திலிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் பெறுபேறுகள் அடிப்படையிலான நிலை 7ஆவது இடத்தினை நோக்கி நகர்ந்துள்ள அதே நேரம், வவுனியா மாவட்டம் 25ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. அதே நேரம் இந்த பட்டியலில் முல்லைத்தீவு 8ஆவது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

அதே நேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பெறுபேறுகள் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளதை காண முடிகின்றது. கடந்த வருடத்தில் கொரோனா பரவலை பலர் காரணம் காட்டினாலும் கூட இந்த பிரச்சினை எல்லா மாவட்டங்களுக்கும் பொதுவானதே. ஆகவே கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி அலுவலகங்கள் அடுத்தடுத்த காலங்களில் கிளிநொச்சி மாவட்ட கல்வி அடைவு வீதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அதிக தேவையுள்ளதை இந்த பெறுபேறுகள் தெளிவாக காட்டுகின்றன.

இந்த பெறுபேறுகளின் முடிவுகள் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்டுகின்ற அதே நேரம் வடக்கு – குறிப்பாக யாழ்ப்பாணம் தன்னுடைய கல்வி அடைவு மட்டத்தில் தொடர்ந்து  பின்னடைவை சந்தித்து வருவதை அண்மைய கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றது. 2020 ஆம் ஆண்டில் 5000 மாணவர்கள் வரையில் பல்கலைகழக விண்ணப்பிப்புக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் 4500 மாணவர்களே தெரிவாகியுள்ளனர் . பல்கலைகழக இறுதி  தெரிவு அடிப்படையில் கணிக்கும் போது இந்த தொகை இன்னமும் குறைவடையும். தன்னை கல்விச்சமூகமாக அடையாளம் காட்டிக்கொண்டு வந்த யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை இன்னமும் முன்னேற்றமானதாக மாறவேண்டிய – மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாணவர்களிடையே  வேகமாக துளிர்விடும் போதைப்பொருள் கலாச்சாரத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுமாயின் யாழ்பாபண கல்விச்சமூகம் மீண்டும் விழிப்பு நிலைக்கு வந்து செயலாற்ற வேண்டிய தேவையுள்ளது.

கல்விக்காகவே எமது தமிழ்சமூகம் கடந்த காலத்தில் பல இன்னல்களை சந்தித்தது. போர்க்காலங்களிலும் சரி – இடப்பெயர்வுகளின் போதும் சரி – வறுமையின் போதும் சரி நமது தமிழ்சமூதாயம் கல்வியை இறுக்கமாகப்பிடித்திருந்ததது. எனினும் அண்மைய காலங்களில் வேகமாக மாணவர்களிடையே அதிகரித்துள்ள  தொலைபேசிப்பாவனை, மக்களிடம் பரவியுள்ள வெளிநாட்டு மோகம், போதைப்பொருள் கலாச்சாரம், பணம் ஈட்டும் தொழிலாக கல்வி மாறியுள்ளமை என பல காரணங்களால் வடக்கு -கிழக்கின் கல்வியும் அபாயமான ஒரு சூழலை எட்டியுள்ளது.

எனவே வடக்கு – கிழக்கின் கல்விமான்களும் – ஆசிரியர்களும் – அரச அதிகாரிகளுமாக இணைந்து வடக்கு – கிழக்கில் மீண்டும் முன்னேற்றமடைய ஆரம்பித்துள்ள இந்த ஆரோக்கியமான கல்விச்சூழலை இன்னும் ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க இயங்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *