மிக்கையில் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா?

ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை சிதறடித்தவராகக் தன் மக்களால் – ரஷ்யர்களால் கருதப்படும் ஜனநாயகத்தை கொண்டுவந்தவராக அமேரிக்க கூட்டு நாடுகளால் போற்றப்படும் சர்ச்கைக்குரிய முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் மிக்கையில் கோர்ப்பசேவின் உடல் இன்று மொஸ்கோவில் அடக்கம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட்ட பின் இடம்பெற்ற தேர்தலில் மிக்கைல் கோர்பசேவால் ஒரு வீத வாக்குகளை மட்டுமே தக்க வைக்க முடிந்தது. தனது கடைசிக் காலங்களை மிக்கையில் கோர்பசேவ்வால் நிம்மதியாகக் கழித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

பனிப் போரை இருதரப்பும் விட்டுக்கொடுத்து முடிவுக்கு கொண்டுவரவில்லை. சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த நாடுகள் நேட்டோவில் அங்கத்துவம் பெற ரஷ்யாவின் எல்லைகளை நேட்டோ சுற்றி வளைத்துக் கொண்டது. சோவியத் யூனியன் சிதறடிக்கப்பட நேட்டோ அந்த நாடுகளை அணி சேர்த்துக்கொண்டது. இன்றைய ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு வித்திட்டதும் அன்று 1991இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மிக்கைல் கோர்பசேவ்.

அமெரிக்காவும் நேட்டோவும் கனவிலும் எதிர்பாரத்திராத வகையில் சோவியத் யூனியன்வை சிதறடித்தது மிக்கைல் கோர்பசேவ்வின் மீள்கட்டமைப்பு என்ற ‘பிறிஸ்ரொய்கா – perestroika’. அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவருடைய வெளிநாட்டு அமைச்சர் பொறிஸ் யெல்சின் நேட்டோ நாடுகளின் குட்டி நாய் போலவே நடந்துகொண்டார். குடிக்கும் பெண்களுக்கும் அடிமையான இவர் பொதுவெளியில் கூட கண்ணியத்தை கடைப் பிடிப்பதில்லை. மிகைல் கோர்பசேவ்வும் – பொறிஸ் யெல்சினும் சோவியத் யூனியனைச் சிதறடித்து கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மக்டோனால்ட்ஸ் போன்ற தங்கள் பல்தேசியக் கொம்பனிகளை ரஷ்யாவினுள் நுழைத்தன. பொருளாதார ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்தது. தங்கள் குடும்பங்களின் நாளாந்த வாழ்க்கைக்கு ரஷ்யப் பெண்கள் தங்களை விபச்சாரத்திற்கு தள்ள வேண்டிய நிலை 1990க்களில் ஏற்பட ஆரம்பித்தது.

மிக்கைல் கோர்ப்பசேவின் இறுதி அடக்கம் அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்படவில்லை. ரஷ்யர்கள் அவருடைய மரணம் தொடர்பில் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. தற்போதைய ரஷ்யத் தலைவர் விளாடிமிர் பூட்டினுக்கும் – மிகைல் கோர்ப்சேர்வ்க்கும் கொள்கை அடிப்படையில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. மிகைல் கொர்பசேவின் மீள்கட்டமைப்பு பிறிஸ்ரொய்கா இந்த நூற்றாட்டின் மிகப்பெரும் தவறு என்று குறிப்பிட்ட விளாடிமீர் பூட்டின், மேற்குநாடுகளை கோர்பசேவ் மிகையாக நம்பிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

1980க்களில் பனிப்போர் காலத்தின் அரசியல் சூழல் இலங்கையிலும் பிரதிபலித்தது. இந்திய – சோவியத் உறவுகள் மிக இறுக்கமாக இருக்க, அமெரிக்க இலங்கையின் நெருக்கம் இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அயல் நாடான இலங்கையில் தனக்கு எதிரான போக்கில் அமெரிக்காவுக்கு சாயும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான அரசுக்கு பாடம் புகட்ட வளர்த்து எடுக்கப்பட்டதே தமிழீழ விடுதலைப் போராட்டமும். தமிழீழ விடுதலைப் புலிகளும். அதன் பின் வேலியே பயிரை மேய்ந்ததும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றானது. இந்த அரசியல் சதுரங்கத்தில் அரசியல் கூட்டுக்கள் மாறியது. அமெரிக்காவும் இந்தியாவும் நட்பாகியது. விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகினர். இந்தியா உசுப்பிவிட்ட தமிழீழத்துக்கு தமிழீழம் உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் துடித்தனர். பாவம் இலங்கைத் தமிழர்கள். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இருந்த உரிமைகளையும் இழந்தனர். இன்னும் இந்தியா தமிழீழம் வாங்கித் தரும் என்று அடம்பிடிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

இப்போது பிஜேபி யோடு சேர்ந்து மறவன்புலவு சச்சிதானந்தம் கோஸ்டி சைவத் தமிழீழம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு கொடி பிடிக்கவும் போராடவும் நியாயம் கற்பிக்கவும் எமக்கு அரசியல் தலைமைகள் இருக்கின்றன. யாரோ பெற்ற பிள்ளைகளை விடுதலை என்ற பெயரில் எதற்கும் பலிகொடுப்பதில் இலங்கைத் தமிழர்களும் புலத்து தமிழர்களும் மகா வல்லவர்கள்.

பனிப் போர், கோடைப் போர், அரப் ஸ்பிரிங், ஹோல்பேஸ் ஸ்பிரிங் என்பதெல்லாமே மக்களை மடையர்களாக்குவதாக ஆகிவிட்டது. பிறிஸ்ரொய்கா போல். மிகைல் கோர்பசேவ்வின் பிறிஸ்ரொய்கா நேட்டோ நாடுகளுக்கு கிடைத்த அல்வா.

தமிழீழம் கேட்ட ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். “கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்தியா தமிழீழம் எடுத்து தராவிட்டாலும் ஜுலி சங் தமிழீழம் எடுத்துத் தர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ரிஷி சுநாக் நிச்சயம் உதவியிருப்பார். அவர் வெற்றி பெற்றிருந்தால். எத்தளை காலம் தான் ஏமாற்றுவார் இந்த மக்களை?

மிகைல் கோர்பசேர்வ் நல்லவரா? தீயவரா? என்ற இந்தக் கேள்விக்கான இரு பதில்களுமே சரியானது. பதில் அளிப்பவரைப் பொறுத்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *