காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் திடீர் கரிசனை – ஐ.நா அமர்வினை நோக்கி காய்களை நகர்த்தும் ரணில் அரசு !

நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பூர்த்தியாகிவிட்டதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை  இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகம் தொடர்பில் மேலும் பேசிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  ,

குறிப்பிட்ட அலுவலகம் காணிவிடயங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் போன்ற விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில்புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகளிற்கு தீர்வை காணும் விடயத்தில் இந்த அலுவலகம் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்துடன் இணைந்து செயற்படும்.

புதிய அலுவலகம் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தொடர்புகொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வின் போது  அரசாங்க பிரதிநிதிகளிற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கம்புதிய செயலகம் குறித்து புலம்பெயர் அமைப்புகளிற்கு தெளிவுபடுத்தும்.  இந்தசெயலகம் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்பும்.

2015 அல் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் கீழ் இவ்வாறான அலுவலகமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன ஆனால் அவ்வேளை காணப்பட்ட நிலைமை காரணமாக இது சாத்தியப்படவிலை ஆனால் நாங்கள் இந்த முறை அதனை ஆரம்பிப்பதில் உறுதியாகவுள்ளோம் நீதியமைச்சு  அதற்கு ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

………………….

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மிகப்பெரும் அரசியல் லாபமீட்டும் விடயமாக மாறிப்பபோயுள்ளது. தமிழ்தேசிய கட்சிகளும் சரி – சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும் இது தொடர்பில் தேர்தல் காலங்களில் மட்டுமே பேசி பிறகு மீண்டும் ஐ.நா கூட்டத்தொடரின் போது மட்டுமே பேசப்படுகின்ற விடயமாக மாறியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 2000 நாட்களை தாண்டியும் தங்களுடைய போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. போர் நடந்த காலத்தில் ஆட்சி செய்த ராஜபக்ச அரசு காலத்திலும் காணமலாக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் டொலர் தொகையை அதிகரிப்பதற்காகவும் – புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சர்வதேச அளவில் கொடுத்துவரும் அழுத்தங்களை கட்டுப்படுத்தி – ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பில் கனிசமானளவு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்டுவதற்காகவே இந்த ஏற்பாடுகள் எனலாம்.

ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காலாதிகாலமாக செய்து வந்த அதே  ஏமாற்றுவித்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் “காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் ஒரு கண்கட்டு வித்தை. சர்வதேசத்தை ஏமாற்றும் சதி. இதனால் எந்த பயனும் இல்லை.” என எற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் மீண்டும் ஒரு அலுவலகத்தை உருவாக்கி தமிழர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக நீதியமைச்சர் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்றுவதும் – புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதுமே ஆகும்.

அண்மையில் தமிழர் தொடர்பில் பல தளர்வான போக்கினை ரணில் அரசு முன்னெடுப்பது கூட ஜெனீவா கூட்டத்தொடரை மையப்படுத்திய நகர்வே தவிர வேறெதுவுமில்லை. தீர்வை கொடுப்பதாயின் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு காலத்திலேயே தீர்வை கொடுத்திருப்பார். இது சர்வதேசத்தை தற்காலிமாக திருப்திபடுத்தி கால அவகாசம் பெறும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *