“22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தியதற்காக கோட்டாபாயவை கைது செய்யுங்கள்.”- எஸ்.எம்.மரிக்கார்

மக்களை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தூர நோக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலமே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால்நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று நாட்டிற்கு வருகை தந்தவுடன் அரசின் சலுகைகள் உட்பட விசேட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் காரணமாக மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் இன்று இரண்டு வேளை மாத்திரமே உணவு உட்கொள்கிறார்கள். இரசாயன உரத்தை தடை செய்து நாட்டு மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள். பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும் எரிபொருள்  மற்றும் எரிவாயு வரிசைகள், இரசாயன உரத்தினை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் உட்பட ஒருவேளை உணவை க் கூட உண்பதற்கு உணவின்றி மக்கள் உயிரிழப்பதற்கான முழுமையான பொறுப்பினை கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இதன் காரணமாக உடனடியாக கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டும். அவரைக்  கைது செய்வதன் மூலம் 22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளி நாட்டை வங்குரோத்து நிலைக்கு  கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *