சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவரின் கருத்துக்கு பதில் வழங்கும்போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,
“சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கை குறித்து நான் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிரானவர் அல்ல. அதில் வரி தொடர்பான முக்கிய விடயங்கள் உள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தாங்கள் விரைவில் தேசிய சபையை ஸ்தாபித்து, குறித்த ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை முன்வைத்து கட்சித் தலைவர்களின் கருத்தைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து, பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் உள்ள முக்கியத் தகவல்களை விட்டுவிட்டு ஏனைய விபரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்தார்.