சத்துருக்கொண்டான் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு !

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை மாலை (09) சத்துருக்கொண்டான் சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக உள்ளுர் மக்கள் கருதுகின்றார்கள்.

படுகொலைக்களத்திலிருந்து ஒருவர் மட்டும் உயிர்தப்பி நடந்தவற்றைக் கூற சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரியவருகிறது.

அப்போது திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக இருந்தவரும் மட்டக்களப்பு சமாதானக் குழுவின் உறுப்பினருமாக இருந்த கலாநிதி கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை சம்பவம் நடந்த மறுதினம் இராணுவத்தின் துணையுடன் படுகொலை இடம்பெற்ற பகுதிக்குச் சென்றிருக்கிறார். “முழுவதும் எரியூட்டப்பட்டிருந்தது. ஆனால், முழுவதும் எரியாத நிலையில் தலைகள், உடல் அங்கங்கள் கிடந்தன. அப்போது, என்னை அழைத்துச் சென்ற இராணுவ கர்ணல் பேர்சி பெர்ணான்டோ, “எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. எங்களுடைய ஆட்கள்தான் செய்திருக்கிறார்கள். எனவே, நான் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக தற்போது ஓய்வுநிலையில் இருக்கும் முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்ததை  பகிர்ந்துகொண்டார்.

படுகொலை சம்பவம் இடம்பெற்ற ‘போய்ஸ் டவுன்’ இராணுவ முகாமிலிருந்து கால் மைல் தூரத்தில், குளக்கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சாப்பைப் புற்காட்டில் உயிர்ப்பயத்துடன் மறைந்திருந்தவாறு, அலறல் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இரத்தினஐயாவும் அன்று கண்ட சம்பவத்தை  பகிர்ந்துகொண்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரியான கேர்ணல் பேர்சி பெர்ணான்டோ இந்த சம்பவத்தை மறுதலிக்கும் வகையில் சாட்சியமளித்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்று 32 ஆண்டுகளாகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *