போதையில் சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரன் – சகோதரி தற்கொலை – யாழில் குடும்ப உறவுகளையும் சீரழிக்க ஆரம்பித்துள்ள போதைப்பொருள் கலாச்சாரம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் இளைஞர்களிடையே அதிகரித்லு வருகின்றது. வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை இந்த போதைப்பொருள் பாவனை மிகத் தீவிரமடைந்துள்ளது. மிகக்குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள் மற்றும் ஊசி போதைப்பொருள் பாவித்ததால் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளில் வாள்வெட்டு – வன்முறை கலாச்சாரத்தை தூண்டிவருகிறது.

இந்த போதைப்பொருள் பாவனையை தடுக்க வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரோ – கல்விகற்ற சமூகத்தினரோ – சமூக அமைப்புக்களோ எந்த நடவடிக்கைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொள்ளவில்லை.  அன்றாடம் செய்திகளில்  நாம் காணும் – இலகுவாக நாம் கடந்து செல்லும் செய்திகளில் உள்ள ” யாழ்.கடற்பரப்பில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது, மாணவனிடம் இருந்து ஐஸ்போதைப்பொருள் மீட்பு, இளைஞர்களிடையே வாள்வெட்டு” என ஏதேனும் ஒரு செய்தி சரி காணப்படும். அந்தளவிற்கு நமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை மலிந்துவிட்டது.

தொடர்ந்து தீவிரமடையும் இந்த போதைப்பொருள் பாவனையின் விளைவு வடக்கிலுள்ள குடும்ப உறவுகளையும் சீரழிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் போதைப்பொருள் பாவித்த சகோதரன் தன்னுடைய சகோதரியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியால் சகோதரி உயிரை பார்த்துக்கொண்ட கொடூரம் நமது சமூகத்தில் தான் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;

சுன்னாகம் காவல்துறை பிரிவில் வீடொன்றில்  போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உட்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய 20 வயதுடைய இளம் பெண் (11.09.2022)  இன்று தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளம் பெண் குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இது குறித்து மூத்த சகோதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதன் வெளிப்பாடே இந்த சம்பவமுமாகும். வழமை போல் சில தினங்களுக்கு ஊடகங்களும் இதைப்பற்றி பேசிவிட்டு புதிய பிரச்சினைகளை பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் அதன் பின்னால் ஓட  ஆரம்பிப்பார்கள்.

ஆனால் இது நாம் எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க – போதைப்பொருள் அற்ற சமூதம் ஒன்றை உருவாக்க நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் என யாருமே சிந்திப்பது கிடையாது. இந்த சுயநல மனோநிலையின் வெளிப்பாடே யாழில் நடந்து கொண்டிருக்கும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களின் நீட்சியும் – பாலியல் வன்கொடுமைகளின் தொடர்ச்சியுமாகும்.

இந்த போதைப்பொருள் பாவனை பிரச்சினை புதிய வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

இது தொடர்பில் யாழ்ப்பாண பகுதியில் உள்ள பொலிசாரும் – பாடசாலை ஆசிரியர்களும் – பெற்றோர்களும் – சமூக தொண்டு நிறுவனங்களும்  விழிப்புணர்வுடன் பொதுநல சிந்தனையுடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனை அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

இப்போதும் நாம் சுதாகரிக்காது நமது வீட்டில் இந்த பிரச்சினை இல்லையே என கடந்து செல்லும் அதே சுயநல மனோநிலையில் இருப்போமாயின் நமது வருங்கால தலைமுறையினர் நமது கண்முன்னே போதைப்பொருள் கலாச்சாரத்தால் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *