இலங்கைக்கு எதிரான சர்வதேச பொறிமுறைகளுக்கு உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் – ஜெனீவா அமர்வில் மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல் !

“இலங்கைக்கு எதிரான சர்வதேச பொறிமுறைகளுக்கு உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் உரையாற்றிய மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் வலியுறுத்தியுள்ளார்.

 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்களின்கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தண்டணை வழங்குவதற்கும் சர்வதேச சட்டவரம்பின் மூலமான வழிமுறைகளைப் பயன்படுத்தல் மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு உறுப்புநாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும்  நாடா அல்-நஷீஃப் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்றையதினம் ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் அவ்வறிக்கையின் சாரம்சம் பேரவையில் வாசிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து பேசியமை வரவேற்கத்தக்க விடயமாகும். இருப்பினும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் அரச சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை மற்றும் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை, பௌத்த தொல்பொருள் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வதாகக்கூறி மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர், முன்னாள் போராளிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள், வட, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் என்பன தொடர்ந்தும் தீவிர கரிசனைக்குரிய விடயங்களாகவே இருந்துவருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *