தற்போது நிலவும் நெருக்கடியானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு தற்போதைய நெருக்கடியானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு உட்பட, போராட்டக்கார்கள் மீதான சமீபத்திய நடவடிக்கை குறித்து நியூசிலாந்து கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றும் நியூசிலாந்து மீண்டும் வலியுறுத்தியது.
அத்தோடு இலங்கையின் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
இதேவேளை 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயன்முறைகள் நடைபெறாதமை காரணமாக இலங்கையில் சாட்சியங்களை சேகரிக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பணி தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் முழுமையாக ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.