மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
.