ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மேலதிகமாக சிரேஸ்ட தலைமைப் பதவியொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் அதேவேளை, கட்சியின் சிரேஸ்ட தலைவராக பிறிதொருவர் நியமிக்கப்படவுள்ளார். குறித்த இரண்டு பதவிகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து கட்சியின் எட்டு சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆய்வு நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
சிரேஸ்ட உறுப்பினர்களின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சியின் செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதேவேளை எதிர்காலத்தில் கட்சிப் பதவிகளுக்காக போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பல கட்சிகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளதாகவும், பதவி மோகம் எதுவும் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் காணப்படும் முரண்பாடுகள் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.