இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் இறக்குமதி உரிமையானது இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது என்று பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
அமைச்சர் இவ்வாறு தெரிவிக்கையில், ஜே.வி.யின் பின்வரிசை எம்.பி.யான ரணவீரபத்திரன பௌசி பாவம் என்றார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
எரிபொருள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றம் ரத்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதில் பெற்றோல் விலைகுறைப்பு தொடர்பான உத்தரவு மட்டும் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. எனினும் ஏனைய உத்தரவுகளின் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து நிதியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
எனினும் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுகள் பின்னர் அந்த நீதிமன்றத்தாலேயே ரத்து செய்யப்பட்டன. இதன் பிரகாரம் எண்ணெய் இறக்குமதி உரிமை மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் நடைபெற்று விட்டதா என அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பௌசி, இல்லை இல்லை அது (எண்ணெய் இறக்குமதி உரிமை) இன்னும் நிதியமைச்சின் வசமே இருக்கின்றது. நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது என்றார்.
ஆனால், ஆயுதங்கள் மற்றும் மருந்து பொருட்கள் கொள்வனவை விட பாரிய வியாபாரமான எண்ணெய் இறக்குமதியை நிதி அமைச்சு உங்களிடமிருந்து கைப்பற்றியுள்ளது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதன்போது பௌசி பாவம் என்று ரணவீர பத்திரன தெரிவித்தார்.