ஓகஸ்ட் 29 மற்றும் 20ம் திகதிகளில் கிளிநொச்சியில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியிலும் விற்பனையிலும் கலந்துகொண்ட ‘அக்காச்சி’ பிராண்டின் உரிமையாளர் அனுஜா ராஜ்மோகன், லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற கலந்துரையாடலில் “சின்னச் சின்ன தொழில்களை உருவாக்கும் சக்தியைப் பெறுங்கள், உங்களுக்கும் அயலவர்களுக்கும் தேவையான பொருட்களை செய்கின்ற சிறு உற்பத்தியார்களாக மாறுங்கள்” எனத் தெரிவித்தார். “நான் பட்ட வலிகளை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது” எனத் தெரிவித்த அவர் “பதின்மப் பருவத்தில் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிட்டு மூட்டைகளை சுமந்ததையும் கூழ் விற்றதையும் கிண்டல் பண்ணி எனக்கு திருமணமாகாது குடும்ப வாழ்வு அமையாது என்றெல்லாம் உறவுகள் ஒதுக்கி வைத்தனர்” என்றும் தன்னுடைய வலி மிகுந்த அனுபவங்களை அங்கு வந்திருந்த தொழில்முனைவோரோடு பகிர்ந்து கொண்டார். “அன்று அவர்களின் நையாண்டிகளைச் செவிமடுத்து இருந்திருந்தால் இன்று இந்த ‘அக்காச்சி’ என்ற பிராண்ட் உருவாகியிராது. நான் இந்த மேடையிலும் ஏறியிருக்க முடியாது. ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு இருப்பேன்” என்றும் அனுஜா ராஜ்மோகன் தன்னுடைய இன்றைய நிலையை இட்டு பெருமைப்பட்டுக் கொண்டார். அனைவரது பாராட்டுக்களையும் சபையில் இருந்து பெற்றார்.
ஓகஸ்ட் 29 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக சிறுகைத் தொழில் அபிவிருத்தி பிரிவு கச்சேரி மற்றும் மனிதவலு அபிவிருத்தி பிரிவு, கிரிசலிஸ் (Chrysalis) ஆகியன உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சசியும் விற்பனையும் மேற்கொண்டது.இக்கண்காட்சியில் லிற்றில் எய்ட் நிறுவனம் தனது மணவர்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து 15,000 ரூபாய் வரை லாபமீட்டியது. ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் நிறுவனத்திலும் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் அத்துடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இவ்விற்பனையின் மூலம் லிற்றில் எய்ட் 40,000 ரூபாவரை லாபமீட்டியதுடன் பல்வேறு தொழில்முனைவோருக்கும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் விற்பனை செய்வதற்குமான வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இவ்விரு கண்காட்சியிலும் விற்பனையிலும் பல்வகைப்பட்ட உணவுப் பொருட்கள், தைத்த ஆடைகள், தையல் அலங்காரங்கள், ஆபரணங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் தங்கள் சந்தை வாய்ப்புகளைத் தூண்டும் நோக்கோடு இக்கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. பல தொழில்முனைவோர் இந்நிகழ்வுகளின் மூலம் பொருட்களுக்கான கட்டளைகளை (ஓடர்) பெற்றதாக தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 20இல் லிற்றில் எய்ட் இல் இடம்பெற்ற தொழில்முனைவோருக்கான கண்காட்சி கலந்துரையாடலை கிளிநொச்சியில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்ற விவேகானந்தா கல்லூரியின் அதிபர் ஜெயா மாணிக்கவாசகர் திறந்து வைத்தார். லிற்றில் எய்ட் இன் செயற்பாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதை இந்த தொழில்முனைவோருக்கான கண்காட்சி எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர் நாங்கள் கற்பித்து அனுப்புகின்ற மாணவர்களை லிற்றில் எய்ட் இப்பிரதேசத்தின் தொழில்முனைவோரோக்கி அவர்களாலும் முடியும் என்று காட்டியுள்ளது எனத் தெரிவித்தார். லிற்றில் எய்ட் இல் கல்வி பயிலும் மாணவர்கள் கிளிநொச்சி நகரத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோருக்கு உதவும் அலுவலராகவும் அதேசமயம் லிற்றில் எய்ட் நம்பக்கை சபை உறுப்பினராகவும் செயற்படும் எஸ் தேவதாஸ் அவர்கள் ‘தொழில்முனைவோருக்கான களம் கிளிநொச்சி’ என்ற தொனிப் பொருளில் உரையாற்றினார். “மூலப்பொருட்கள் மூலப்பொருட்களாகவே விற்பனை செய்யப்படுகின்றது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக்கி அவற்றுக்கு வெவ்வேறு வழிகளில் பெறுமதியைச் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு அழுத்தமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு ஏனைய பிரதேசங்களுக்கும் குறிப்பாக தமிழர்கள் பரந்து வாழுகின்ற மேற்கு நாடுகளுக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களாக ஆகமுடியும் என்பதை அவர் வலியுறுத்தினார். உள்ளுரில் கிடைக்கின்ற சத்தான உணவுகள் பற்றி நாங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் உரையாற்றுகையில் தொழில் முனைவோருக்கு உள்ள பல்வேறு உதவித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்டி தொழில்முனைவோர் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் தங்கள் தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் மாணவியாக இருந்து அதன் உதவித் தையலாசிரியராக தையல் வீட்டுத் தோட்டம் என்று தொழில்முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் தமிழினி லிற்றில் எய்ட் இன் ஒரு முன்மாதிரியான தொழில்முனைவோர். தான் யாரிலும் எதற்காகவும் தங்கி இருப்பதில்லை என்று குறிப்பிடும் மூன்று குழந்தைகளின் தாயான இவர் வீட்டில் இருந்தவாறே தன்னால் தனது தேவைக்கதிகமாக பணத்தை ஈட்ட முடிகிறது என்றும் இதனை ஒவ்வொருவராலும் செய்ய இயலும் என்றும் தெரிவித்தார். தமிழினி வீட்டுத் தோட்டத்து ‘வோட்டர் மெலன்’ மிக அருமையான சுவையோடு இருந்ததாகக் குறிப்பிட்ட லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி தமிழினி ‘சென்றவாரம் வோட்டர் மெலன்களை விற்று 30,000 சம்பாதித்து இருந்ததாகக் குறிப்பிட்டார். அவர் வீட்டிலேயே தையல் சேவையை வழங்குகிறார். கை வினைப் பொருட்களைத் தயாரிக்கின்றார். கம்பளி ஆடைகளை நெய்கின்றார். அவர் மிகவும் விவேகமான சுறுசுறுப்பான தொழில்முனைவர் என்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இக்கண்காட்சியும் கலந்துரையாடலும் லிற்றில் எய்ட் ஆசிரியர்கள் மாணவர்கள் திறம்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
“வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க வழங்கள் எதுவும் இல்லாமல் அந்நாடுகள் செல்வந்த நாடுகளாக உள்ளன. ஆனால் இந்நாட்டில் அளவுக்கு மிஞ்சிய வளங்கள் இருந்தும் கவனிப்பார் இல்லாமலே பூத்துக் காய்த்து கனி தரும் மரங்கள் இருந்தும் நாங்கள் வறிய நாடுகளாக இருப்பது வேதனையளிக்கின்றது” என லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் குறிப்பிட்டார். ‘தொழில்முனைவோர் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார். “பிரித்தானியாவில் ‘அப்பிள்’ உள்ளங்கையளவு பழம். அதிலிருந்து முடிவுப்பொருட்களாக குளிர் பானங்கள், ஏராளமான உணவு வகைகள் (அப்பிள் பை, அப்பிள் ரேன்ஓவர், அப்பிள் சோர்ஸ், அப்பிள் கேக், அப்பிள் ஸ்ரப்பிங்,..) குடிபானங்கள் உருவாக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் எம் நாட்டில் கனியும் அந்தப் பெரிய பிலாப்பழத்தில் நாங்கள் முடிவுப் பொருளாக குறிப்பிடப்படும் படியாக எதையும் செய்வதில்லை. இந்நிலை மாற்றப்பட்ட வேண்டும்” என த ஜெயபாலன் தன்னுரையில் குறிப்பிட்டார்.
“தொழில்முனைவோர் ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தின் முதகெலும்பானவர்கள். அவர்களே அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியவர்கள். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகவும் வரவேற்கப்படக் கூடியது. ஏனெனில் இலங்கை மக்கள் மாற்று வழியில் சிந்திக்க வேண்டும். தொழில்முனைவோர் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இப்போதுள்ள உற்பத்தி முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாடு சுயஉற்பத்தியில் ஈடுபட்டு இறக்குமதியைக் குறைத்து இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டும். அதற்கு தொழில்முனைவோருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறி த ஜெயபாலன் தனனுரையை நிறைவு செய்தார்.
லிற்றில் எய்ட் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சில நூறுபேர் கலந்து சிறப்பித்தனர். தொழில்முனைவோரும் தங்கள் பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு விற்பனையிலும் ஈடுபட்டு இருந்தனர்.