இரா.சம்பந்தனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில், இது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்தும் இரா.சம்பந்தனை விலக்குவதற்காக அவருடன் கலந்துரையாட மத்திய குழு கூட்டத்தில் குழு நியமிக்கப்பட்டதாக வௌியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.