மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை மீண்டும் பிரித்தெடுக்க தேவை ஏற்படுமாயின், அதனை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் மேற்கொள்ள முடியும் என மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மனிதப் புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
மன்னார் நீதவான் முன்னிலையில் மனித எச்சங்களை பிரித்தெடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவிற்கு ஆய்விற்கு அனுப்புவதற்கான கட்டளை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், மாதிரிகளை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று பிரித்தெடுப்பதாக இருந்தால், பல வருடங்கள் பழமையான எச்சங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, அவற்றை அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுப்பதற்கான அனுமதியை வழங்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
எனினும், அநுராதபுரம் சென்று அவற்றை பரிசோதிப்பதற்கு தனக்கு நியாயாதிக்கம் இல்லை என மன்னார் நீதவான் அறிவித்துள்ளார்.
ஆகவே, மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைய, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அநுராதபுரம் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சதொச மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.