அதிகார ங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் அரசு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி. இந்தப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தியது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஒய்வூதிய சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. பேமசிறி மானகே மேலும் கூறியதாவது;
அரசு தமிழருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கப் போகின்றது. இதுதொடர்பாக ஜனாதிபதியே சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு ஈழத்தை உருவாக்கிக் கொடுக்கும் திசையில் சென்று கொண்டிருக்கின்றது.
யுத்தத்தில் படையினர் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மக்கள் பெரும் சுமைகளை சுமந்து கொண்டிருக்கின்றார்கள். படையினரும் தமது உயிர்களை தியாகம் செய்து நாட்டின் இறைமையை காக்க போராடுகின்றனர். புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு மக்களின் ஆதரவைக் கோரும் அரசு அந்த மக்களின் இடுப்புப்பட்டிகளை இறுகக்கட்டுமாறு கோருகின்றது. இந்த நாட்டுக்காகவும் படைவீரர்களுக்காகவும் மக்களும் சுமைகளை சுமக்கின்றனர். ஆனால், அரசோ இதனைப் பயன்படுத்தி சுக போகங்களை அனுபவிக்கின்றது.
அதிகாரத்தை பகிர்தல், ஈழத்தை உருவாக்குதல் போன்ற அரசின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதனை அனுமதிக்க முடியாது. சமுர்த்தி அதிகாரிகள் நியமனம் அரசியல் ரீதியாகவே இடம்பெறுகின்றது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே அரசு சமுர்த்தி அதிகாரிகள் நியமனங்களை வழங்குகின்றது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சீராக செயற்பட்டாலே நாடு ஒழுங்காக இருக்கும். ஆனால், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிகள் திருப்திகரமாக இல்லை. பல குளறுபடிகள், ஊழல்கள் காணப்படுகின்றன. படையினரின் விதவைகள் மற்றும் குழந்தைகள் ஒய்வூதிய சட்டமூல திருத்தத்தை நாம் வரவேற்கின்றோம். இதற்காக நாம் முன்பிருந்தே போராடி வருகின்றோம். அது தற்போது தான் கைகூடி வந்துள்ளது. இதேபோன்று, ஆசிரியர் ஒய்வூதிய திட்டம் தொடர்பிலும் திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.