“நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
குருந்தூர் மலை – பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி,பௌத்த தேரர்கள்,சிவில் அமைப்பினர் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பௌத்த நாட்டில் பௌத்த மத பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது சிங்களவர்களின் கடமை மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைவரது கடமையாகும். 2000 வருடகாலம் பழமை வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாப்பது அவசியமானது.
புழமை வாய்ந்த குருந்தூர் மலை விகாரையினை புனரமைத்து பௌத்த மத வழிபாடுகளில் ஈடுப்பட ஒருசில இனவாதிகள் இடமளிக்கவில்லை.இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கில் யுத்த தீவிரமடைந்த போது கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெற்றன. வீதியில் தேர் ஊர்வலம் சென்றன. சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு.நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.
திருகோணேச்சரம் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்பாக முஸ்லிம்,தமிழ் சமூகத்தினர் கடைகளை வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசிக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். கூட்டமைப்பினர் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.