கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *