ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள உக்ரைனின் முக்கிய நகர மக்கள் !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுக நகரமான மரியு போலை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசப்படுத்தியது.

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது. நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புடின் நாளை மறுநாள் (30-ந்திகதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புடின் 30-ந்திகதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புடின் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *