நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிப்போம் என உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருப்பதாகவும் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தேசிய பேரவையில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வைக் காணும் பேச்சை அரசாங்கம் இதயசுத்தியுடன் நடத்த வேண்டும் என எவ்வாறு கோரமுடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
தமிழ் மக்களுக்கு நாட்டில் சுதந்திரம் காணப்படும் நிலையில், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.