ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணிய மறுத்த மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார். போலீசார் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அவரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது. இந்த போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இந்தநிலையில் ஈரானை சேர்ந்த டோனியோ ராட் என்ற பெண் தனது தோழி பணிபுரியும் கம்பெனியில் உள்ள உணவகத்துக்கு காலை சிற்றுண்டி சாப்பிட சென்றார். அப்போது அவர் தலையில் முக்காடு அணியாமல் சாப்பிட்டார். இந்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது வைரலாக பரவியது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டோனி யோராட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாக அவரது சகோதரி டினா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.