திருகோண மலையில் 6 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மக்கள் மத்தியில் அதிருப்தியையும ஆத்திரததையும் எற்படுத்தியுள்ளமை நியாயமானது. ஆனால் இதில் தமது கட்சியை தொடர்புபடுத்தியிருப்பது கவலைக்குரியது என கூறுகின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்.
ஜூட் ரெஜி வர்ஷா வின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார். நேற்று பொலிஸ் காவலில் இருந்த வேளை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சந்தேக நபரான வரதராஜா ஜனார்த்தனன் தமது கட்சியின் உறுப்பினர் அல்ல. தேர்தல் பிரச்சார காலத்தில் சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்ற பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் இக் கொலை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்த ஈடுபாடு காரணமாக குறித்த சந்தேக நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் போன்று மக்கள் மத்தியில் நடமாடியுள்ளார் என்பதை தற்போது தான் தங்களால் அறிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் நேற்று மாலை சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நபர் கொடுத்த தகவலின் பேரில் வீரநகரிலுள்ள கைவிடப்பட்ட கட்டிடமொன்றிலிருந்து 2 கைக்குண்டுகளும் ஏற்கனவே மாகாண சபையின் பாவனையிலிருந்த அச்சுக்கூட களஞ்சியத்திலிருந்து ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் தகவல்களின்படி இரண்டாவது இடத்திலேயே புத்தகங்களுக்குள் மறைத்து வைக்கப்படடிருந்த சயனைட்டை எடுத்து உட்கொண்டதாக தெரிய வருகின்றது.
ரி – 56 துப்பாக்கியொன்றும் தன்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இந்நபர் பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதிலும் அது இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.