ருபெல்லா தடுப்பூசித் தாக்கம் – 26 மாணவிகள் வைத்தியசாலையில்: ஒருவர் மரணம். காரணத்தை கண்டறிய உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அழைப்பு -ஏகாந்தி

vaccina.jpgஇலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் ருபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டதில் சுகவீனமுற்ற பள்ளிக்கூட மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். மேலும் 26 மாணவிகள் மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரி மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்றைய முன் தினம் இடம்பெற்றது. இதன் பின்னர் தடுப்பூசி போடப்பட்ட கல்லூரி மாணவிகள் சுமார் 27 பேர் நோய்வாய்ப்பட்டு மாத்தறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்ளுள் 12 வயது பஷாலா ஹன்சலா என்ற மாணவி நேற்று இறந்துவிட்டார்.

கடந்த 1996 ஆண்டிலிருந்து இந்த ருபெல்லா தொற்று நோய்க்கிருமிக்கான தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஆனாலும் இப்போதுதான் இந்த துரதிஷ்டமான சம்பவம் முதன்முறையாக இடம்பெற்றிருப்பதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் விளக்கம்

nimal.jpgமாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; மேற்படி சம்பவம் தொடர்பாக ஆராய நான்கு விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பியுள்ளதுடன் இப் பாதிப்பின் விஞ்ஞான ரீதியான பின்னணியைக் கண்டறிந்து தமக்கு துரித கதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ள மாணவிகளில் சிலர் நோய் வாய்ப்பட்டிருப்பதுடன் ஒருவர் உயிரிழந்திருப்பது குறித்து தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தைக் கேட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ள மேற்படி சம்பவம் தொடர்பாக சபையில் கேள்வியெழுப்பிய அநுர குமார திசாநாயக்க எம். பி; மேற்படி சம்பவத்தில் மாணவியொருவர் பலியாகியுள்ளதுடன் 26 ற்கு மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? என வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  ருபெல்லா தடுப்பூசித் திட்டம் சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தேசியத் திட்டமாகும். துரதிர்ஷ்டவசமாகவே நேற்று முன்தினம் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது விடயத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனினும் இது விடயத்தில் பெற்றோர் பயப்படுமளவிற்கு தேவையற்ற சந்தேகங்களை எழுப்புவது முறையல்ல எனவும் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க எம். பி. தமது கேள்வியின் போது; காலாவதி திகதியை அண்மித்த ஊசி மருந்துகளை உபயோகித்து அதனை முடிக்கும் நோக்கில் இச் செயற்பாடு இடம் பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர்,  அவ்வாறு எதுவும் இடம் பெறவில்லையெனவும் ருபெல்லா தடுப்பூசித் திட்டம் தொடர்ச்சியாக முறையாக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம் எனவும் கூறினார்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை திங்களன்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சருக்கு கையளிப்போம் என்று மாத்தறைக்குச் சென்றுள்ள மருத்துவ குழுத் தலைவரான டாக்டர் பீரிஸ் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர் விளக்கம்

susil-premaja.jpgருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ருபெல்லா ஊசி மருந்து மூலமான பாதிப்புகள் பற்றிய சர்ச்சை இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கல்வியமைச்சர் என்ற வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதற்கு விளக்கமளித்தார். அமைச்சர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், ருபெல்லா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ஒரு தேசிய திட்டமாகும். இது மாகாண மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் மருத்துவ சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி துரதிர்ஷ்டவசமான சம்பவத்தையடுத்து அத் திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன்,  இது பற்றிய பரிசோதனைகளும், விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன. அதேவேளை, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக நேற்றுக் காலை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொலைபேசி மூலம் எனக்கு விபரித்தார். இது விடயத்தில் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கலை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

mahinda-rajapaksha.jpgருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து வழங்கலை உடனடியாக இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நேற்று பணிப்புரை விடுத்தார்.

ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட மாணவியொருவர் உயிரிழந்திருப்பதுடன் 26 பேர் பாதிக்கப்பட்டு மாத்தறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி பணிப்புரையை சுகாதார அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் வழங்கினார். இதேநேரம் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமையானதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இத்தடுப்பு மருந்து தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான அடிப்படையில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சரையும், அதிகாரிகளையும் கேட்டிருக்கிறார்.

இதேநேரம், பாடசாலைகளில் மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கும் விதம் தொடர்பாக சுகாதார அமைச்சுடன் இணைந்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்துக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் மாணவியின் இறுதிக்கிரியை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இறுதிக்கிரியைக்கு முன்னர் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • murugan
    murugan

    பரவாயில்லையே. பொறுப்பாக பதிலளிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள். இதுவே இந்தியாவில் நடந்திருந்தால்?

    Reply
  • ஏகாந்தி
    ஏகாந்தி

    மாத்தறை பிரதேசத்தில் ஏற்பட்ட ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை தொடர்பாக தற்போது இரு குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தவிர சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் குழுவொன்றும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தர்.

    அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக நேற்று முன்தினம் மாத்தறை சென். தோமஸ் பெண்கள் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மாணவிக்கு கடந்த 2005ஆம் ஆண்டும் இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அப்போது அம்மாணவி எந்த பாதிப்புக்கும் உட்படவில்லை.

    ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக மாத்தறை தள வைத்தியசாலையில் 26 மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் அவர்களுள் 13 பேர் மட்டுமே தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களுள் 2 பேர் மட்டுமே தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளனர். ஏனையோர் வீடு செல்ல முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களின் பெற்றோர்களது வேண்டுகோளுக்கு இணங்க இன்னும் 2 நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வைத்தியர்கள் அனுமதியளித்துள்ளனர்.

    Reply
  • murugan
    murugan

    ருபெல்லா தடுப்பு மருந்து எதற்காக கொடுக்கப்பட வேண்டும்? பெண்களுக்கு மட்டுமா இது கொடுக்கப்பட வேண்டும்? உயிரிழந்த மாணவிக்கு 2005 லும் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? தடுப்பு மருந்து கொடுக்கும் போது பொது ஆரோக்கியம் கவனமெடுக்கப்படுமா?

    அண்மையில் தமிழ் நாட்டில் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டதால் பல குழந்தைகள் உயிரிழந்திருந்தார்கள். இலங்கை வறிய நாடு. ஏதேனும் பரீடசார்த்த முயற்சியாகவும் இது இருக்கலாமா?

    Reply
  • murugan
    murugan

    “மாத்தறையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது விரைவில் காலவதியாக இருந்த ருபெல்ல மருந்து என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சுகாதார அமைச்சினால் கொண்டுவரப்படும் மருந்துப்பொருட்கள் பல காலாவதியாக இருக்கின்றமையினால் அவற்றை முடிப்பதற்காக உடனடியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இவ்வாறு சில தினங்களில் காலாவதியாகவுள்ள ருபெல்லா மருந்தைக்கொடுத்தமையினாலேயே மாணவியொருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது உயிரிழந்த மாணவியின் வீட்டாருக்கு அரசு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அத்தோடு மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மருந்து காலாவதியாகும் திகதி முடியும் முன்னரே அந்த மருந்தினால் மரணம் ஏற்பட்டிருக்கின்றதென்றால், முதலில் அந்த மருந்தைத் தயாரித்த நிறுவனத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply