தமிழ் பிரதேசங்களில் பொலிஸார் தமது கடமைகளை செவ்வனே செய்வதில்லை. இலஞ்சம் ஊழலுக்குள் அவர்கள் அகப்பட்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விடயங்களில் ஒதுங்கி நிற்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இங்கு வாழும் இளைஞர்களை போதைப்பொருளால் அழிக்கும் முயற்சி திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றது.
இதனை நிறுத்தவேண்டிய பொறுப்பு ஆரம்பத்தில் பெற்றோர்களுக்கு இருந்தாலும் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டவேண்டிய பொறுப்பு பொலிசாருக்கு உள்ளது. ஆகவே பொலிசார் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
இந்த நிலையில் நிலையில்லாமல் இருக்கும் அரசு தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் சில விடயங்களை பேச்சளவில் பேசினாலும் நடைமுறையில் இல்லாத சூழல் உள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான சூழலில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இல்லாமையும் இங்கு பலவீனமான அரசியல் இடம்பெறுவதற்கு காரணமாகும்.
ஆகவே சமூகத்தின்பால் அக்கறை கொண்ட நல்லதொரு பிரதேச சபையினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.